வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்.ஆர்.ஐ.) வரும் மக்களவைத் தேர்தலில் தங்களது வாக்குகளை இணையதளம் மூலம் செலுத்த அனுமதிப்பது தொடர்பாக அதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து வருவதாக உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வரும் ஷம்ஷீர் என் பவர் இது தொடர்பான மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். அதில், வெளிநாடுகளிலிருந்து வாக்களிக்க 114 நாடுகள் அனுமதிக்கின்றன. தூதரக அளவில் வாக்குச் சாவடிகளை அமைத்தல், தபால், இணையம் மூலம் வாக்கு செலுத்துதல், மின்னணு முறையில் வாக்கு செலுத்துதல் போன்ற நடைமுறைகளை வெளி நாடுகளிலிருந்து வாக்களிக்கப் பின்பற்றலாம். இதனால், ஒரு கோடிக்கும் அதிகமான வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களது வாக்குகளைச் செலுத்த முடியும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது இவ்வழக்கு, நீதிபதி கே.எஸ். ராதாகிருஷ்ணன் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்ததது. அப்போது, இணையதளம் மூலம் என்.ஆர்.ஐ. வாக்கைச் செலுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி ஆய்வு செய்ய தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.