இதர மாநிலங்கள்

பாஜக கூட்டணி 300 இடங்களில் வெல்லும்: வெங்கய்ய நாயுடு

செய்திப்பிரிவு

மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி தனிப் பெரும்பான்மையுடன் மத்தியில் அடுத்த அரசை அமைக்கும் என்று பாஜக மூத்த தலைவர் வெங்கய்ய நாயுடு கூறினார்.

இதுகுறித்து அவர் புவனேஸ்வரத்தில் திங்கள்கிழமை கூறியதாவது: பாரதிய ஜனதா கட்சிக்கு மாற்று கிடையாது என மக்கள் உணர்ந்துள்ளனர். நாடு முழுவதும் பாஜக கூட்டணிக்கு சாதகமான அலை வீசுகிறது. மக்களவைத் தேர்தலில் பாஜக மட்டும் சுமார் 250 தொகுதிகளை கைப்பற்றும்.

கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து சுமார் 300 இடங்களை கைப்பற்றுவோம். மாநிலக் கட்சிகள் மத்தியில் மாற்று அரசை ஒருபோதும் அமைக்க முடியாது. கடந்த காலத்தில் இதுபோன்ற சோதனை முயற்சிகள் தோல்வி அடைந்துள்ளன. மூன்றாவது அணி என்பது ஒரு கானல் நீர் என்பதை மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். மத்தியில் நிலையான மற்றும் உறுதியான அரசு அமைக்க பாஜக போன்ற வலுவான தேசிய கட்சி நாட்டுக்கு தேவைப்படுகிறது. பிஜு ஜனதா தளம் 14 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த போதும், குடிநீர், கல்வி, வேலை வாய்ப்பு, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றத் தவறிவிட்டது என்றார்.

SCROLL FOR NEXT