பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் நாட்டுக்கே அச்சுறுத்தலாக இருக்கிறார்கள் என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம் சாட்டினார்.
மத்தியப் பிரதேச மாநிலம் மொரினாவில் செவ்வாய்க்கிழமை இரவு நடந்த தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசியதாவது:
ராகுல் காந்தி, நரேந்திர மோடி இருவருமே நாட்டுக்கு அச்சுறுத்தல் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை.
ராகுல் காந்தியை பிரதமராக்க காங்கிரஸ் விரும்புகிறது. எனினும் அதைப்பற்றி அந்த கட்சி வெளிப்படையாக அறிவிக்காமல் இருக்கிறது. அதே நேரத்தில் பாஜகவின் பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடியே.அவர்தான் குஜராத்தில் 2002ல் நடந்த கலவரத்துக்கு பொறுப்பானவர்.
2002ல் நடந்த சம்பவங்களுக்கு பொறுப்பானவர் என்ற முறையில் நரேந்திர மோடியை யாரும் மன்னிக்க முடியாது.
ராகுல் காந்தியோ அறவே அனுபவம் இல்லாதவர். நாட்டை நிர்வகிக்கும் பொறுப்பை ராகுலிடம் நம்பி எப்படி ஒப்படைக்க முடியும்?
முதலாளி வர்க்கத்தின் ஆதரவில் அதிகாரத்துக்கு வரும் பாஜகவும் காங்கிரஸும் பின்னர் அவர்களுக்கு ஆதரவான கொள்கைகளை வகுக்கிறார்கள். இதனால்தான் சுதந்திரம் கிடைத்து 60 ஆண்டு ஆன பிறகும் நாட்டில் ஏழைகளும் தலித்துகளும் இன்னும் வறுமையில் உழல்கிறார்கள் என்றார் மாயாவதி.