# செம்பட்டியில் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டம் நடைமுறைக்கு வராமலே நின்றுவிட்டது. தலைமுடி அதிகமாகக் கிடைக்கும் பழனியில் டோப்பா தொழிற்சாலை, மாம்பழம் அதிமாக விளையும் நத்தம், ஆயக்குடியில் மாங்கூழ் தொழிற்சாலை, நிலக்கோட்டையில் சென்ட் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
# இயந்திர மயமாக்கல் மற்றும் உத்தரப் பிரதேச அலிகார் பூட்டுகள் வருகையால், திண்டுக்கல் பூட்டுத் தொழில் அழிந்துவருகிறது. மத்திய, மாநில அரசுகள் பூட்டு உற்பத்தித் தொழிலுக்குக் கடன் வழங்காதது, உற்பத்தி செய்த பூட்டுகளைச் சந்தைப்படுத்த உதவாதது போன்ற காரணங்களால் சுமார் 15 ஆயிரம் பூட்டுத் தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டன. 60 ஆயிரம் தொழிலாளர்கள் இதனால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
# ‘திண்டுக்கல்காரனுக்குப் பெண்ணைக் கொடுக்கக் கூடாது’ என்ற பழைய சொலவடை இன்றைக்கும் இங்கு நீடிக்கிறது. காரணம், தண்ணீர்ப் பஞ்சம். எம்.ஜி.ஆர்., தொடங்கிய பேரணைத் திட்டம் முடங்கிப்போனது. காமராஜரின் ‘ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத் திட்ட’த்தில் நீர் ஆதாரம் போதவில்லை. கரூர் காவிரி குடிநீர்த் திட்டத்தை நம்பியே திண்டுக்கல் குடிநீர்த் தேவை சமாளிக்கப்படுகிறது. 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் கிடைத்தாலே அபூர்வம் என்கின்றனர் மக்கள்.
# பழனி, கொடைக்கானலுக்குச் செல்லும் திண்டுக்கல் - பழனி சாலையில் வாகனப் போக்குவரத்து பரபரப்பாகக் காணப்படும். தைப்பூசத் திருவிழாவில் லட்சக் கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாக பழனி செல்கிறார்கள். அதே நேரத்தில் சபரிமலை சீசனும் களைகட்டுவதால், திண்டுக்கல் - பழனி சாலையில் பாதயாத்திரை பக்தர்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். இதைத் தடுக்க 2012-ம் ஆண்டு மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சகம் 5 கோடியே 85 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பாதயாத்திரை சாலை அமைக்கத் திட்டமிட்டது. ஆனால், அந்தப் பணி மூன்று ஆண்டுகளாக இழுபறியில் இருப்பதால் உயிர்ப் பலிகள் தொடர்கின்றன.
# நிலக்கோட்டையில் உற்பத்தியாகும் மல்லிகைப் பூக்கள் சிங்கப்பூர், மலேசிய நாடுகளின் நறுமணத் தொழிற்சாலைகளுக்கு ஏற்றுமதியாகின்றன. இதனால் கடந்த 10 ஆண்டுகளாக நிலக்கோட்டையில் நறுமணத் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்திவருகின்றனர். இதனால், விவசாயிகளுக்குக் கூடுதல் லாபம் கிடைப்பதுடன் உள்ளூர் இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
# திண்டுக்கல் மாவட்டத்தில் பெரிய அளவிலான ஆறுகள், அணைகள் இல்லை. மருதாநதி, பாலாறு பொருந்தலாறு, வரதராமநதி, பரப்பலாறு, குதிரையாறு, கடகனாறு, நங்காஞ்சியாறு முதலான ஆறுகளில் மணலை முறையின்றி அள்ளியதால், நீர் வற்றிவிட்டது. இதனால், விவசாயிகள் கிணற்றுப் பாசனம் மற்றும் ஏரிப் பாசனத்தை நம்பியே உள்ளனர். ஆறுகளைப் பராமரித்து அணைகளைக் கட்டாததால் 2,36,682 ஏக்கர் ஹெக்டேர் விவசாயப் பரப்பு தற்போது 1,60,000 ஏக்கர் ஹெக்டேராகச் சுருங்கிவிட்டது. கடந்த இரு ஆண்டுகளாகப் பருவ மழைகளும் பொய்த்ததால் விவசாய நிலங்கள் வானம் பார்த்த பூமியாக மாறிவிட்டன.
# கொடைக்கானலையும் பழனி மலையையும் ரோப்கார் மூலம் இணைக்கும் சுற்றுலாத் திட்டம் பல ஆண்டுகளாகக் கிடப்பில் உள்ளது.
# திண்டுக்கல் - பழனி சாலையில் ஒட்டன் சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் அருகே கனகாம்பட்டி, சத்திரப்பட்டி உள்ளிட்ட மூன்று இடங்களில் ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். இந்த இடங்களில் ரயில்வே மேம்பாலங்கள் தேவை.
# திண்டுக்கல் நகராட்சி, மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்ட நிலையில், நகரின் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தபடவில்லை. இடநெருக்கடி மிகுந்த பேருந்து நிலையம் நகரின் வளர்ச்சிக்குப் பெரிய தடையாக உள்ளது. கடந்த 2012-ல் உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் புறநகரில் புதிய பேருந்து நிலையம் கட்டப்படும் என்று அறிவித்தார். இதுவரை பணிகள் தொடங்கப்படவில்லை.
# திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரித் திட்டம் கடந்த தி.மு.க., ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. தற்போது இந்தக் கல்லூரி வருவது கனவாக உள்ளது. இதனால், மக்களுக்குத் தரமான மருத்துவச் சிகிச்சை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு கேள்விக்குறியாகி உள்ளது.