கோவிந்தராஜ் - இணை பொதுச் செயலாளர், எக்ஸ்னோரா:
சென்னையில் வசிப்போர் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் தி.நகருக்கு ஷாப்பிங் செய்ய வருவோர் எண்ணிக்கை மிக அதிகம். அதனால் வாகன நெரிசலுக்கு அளவே இல்லை. தி.நகரில் வசிப்போரும், அங்கு வந்து செல்வோரும் நெரிசலில் சிக்கி அவதிப்படுவது தொடர்கிறது. குறிப்பாக, வாகனங்களை நிறுத்துவதற்குப் இடம் இல்லாதது பெரும் குறை. இங்கு வரும் அனைத்து வாகனங்களும் சாலையில் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. இதனால், நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டு பாதசாரிகள்
சாலையில் நடந்து செல்லவேண்டியுள்ளது. இதற்கு ஒரே தீர்வு ஆக்கிரமிப்புகள் அகற்றல் மற்றும் அடுக்குமாடி பார்க்கிங் கட்டுவது. இதுகுறித்து, கடந்த 10 ஆண்டுகளாகவே எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.
தி.நகர் பேருந்துநிலையம் அருகில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலக வளாகம், பேருந்து நிலையம், மாம்பலம் மாசிலாமணி தெருவில் உள்ள மாநகராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் அடுக்குமாடி பார்க்கிங் கட்டலாம். 2005-ல் பனகல் பூங்கா பார்க்கிங் திட்டத்தை அப்போதைய அ.தி.மு.க. அரசு அறிவித்தது. அதில் எங்களுக்குச் சில ஆட்சேபணைகள் இருந்தாலும் ஏதேனும் ஒரு தீர்வு கிடைத்தால் போதும் என்றிருந்தோம். அறிவித்து ஒன்பது ஆண்டுகளாகியும் அதன் ஆரம்பக் கட்டப் பணிகள்கூட நடக்கவில்லை. அரசுக்கு ஒரு யோசனை. மாநகராட்சியோ இதர அரசு நிறுவனங்களோ தங்களது சொந்த நிதியில் அடுக்கு
மாடி பார்க்கிங் வளாகம் கட்டத் தேவையில்லை. கட்டி, இயக்கி, ஒப்படைக்கும் (பிஓடி) திட்டத்தின் கீழ் தனியாருக்கு அனுமதி அளித்தாலே போதும், பிரச்சினை தீர்ந்துவிடும். பல தனியார் நிறுவனங்கள் இதற்காகக் காத்திருக்கின்றன. குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்குப் பிறகு அரசு அதைத் தன்வசம் எடுத்துக் கொள்ளலாம்.