இதர மாநிலங்கள்

நாடாளுமன்றத் தேர்தல் குடும்ப தேநீர் விருந்து அல்ல: பிரியங்கா தாக்கு

செய்திப்பிரிவு

நாடாளுமன்றத் தேர்தல் சித்தாந்தங்களுக்கு இடையிலான போர், குடும்ப தேநீர் விருந்து அல்ல என்று பிரியங்கா காந்தி வதேரா கூறியுள்ளார்.

சில நாள்களுக்கு முன்பு அமேதி பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரியங்கா, எனது தம்பி வருண் காந்தி தவறான பாதையைத் தேர்ந்தெடுத்துவிட்டார் என்று தெரிவித்தார். இதற்கு பதிலடி கொடுத்த வருணின் தாயார் மேனகா காந்தி, எனது மகன் தவறான பாதையை தேர்ந்தெடுத்தானா என்பதை இந்த நாடு முடிவு செய்யும் என்று கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக அமேதியில் நேற்று பிரசாரம் மேற்கொண்ட பிரியங்காவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:

நாடாளுமன்றத் தேர்தல் தேநீர் விருந்து அல்ல, இது சித்தாந் தங்களுக்கு இடையிலான போர். எனது குழந்தை இதுபோன்ற தவறை செய்திருந்தால் அவனை மன்னிக்கவே மாட்டேன். வருண் காந்தி குறித்து நான் கூறிய கருத்துகளுக்காக வருத்தப்பட வில்லை என்று தெரிவித்தார்

சூப்பர் பிரதமர்

பிரதமர் மன்மோகன் சிங் பெயரளவுக்கு மட்டுமே பிரதமராக இருந்தார். அவரை இயக்கியது சோனியா காந்திதான் என்று பிரதமரின் முன்னாள் செய்தி ஆலோசகர் சஞ்சய பாரு எழுதிய நூலில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து பிரியங்காவிடம் கேட்டபோது, பிரதமர் மன்மோகன் சிங்கை யாரும் இயக்கவில்லை, அவர் சூப்பர் பிரதமராக செயல்பட்டார் என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT