வதோதராவில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தாக்கல் செய்த வேட்புமனுவில், தனக்கு திருமணமாகிவிட்டது என்பதை குறிப் பிட்டுள்ளார்.
குஜராத் மாநிலம், வதோதராவில் நரேந்திர மோடி (63) கடந்த புதன்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார். அதனுடன் தாக்கல் செய்திருந்த பிரமாணப் பத்திரத்தில், தனது மனைவியின் பெயர் யசோதா பென் (62) என்று குறிப்பிட்டுள்ளார். எனினும், சொத்து விவரங்களை தெரிவிக்க வேண்டிய இடத்தில், மனைவியின் பெயரில் என்ன சொத்து உள்ளது என்பது பற்றி தெரியாது என்று கூறியுள்ளார். அந்த பிரமாணப்பத்திரத்தை புதன்கிழமை நள்ளிரவு வதோதரா மாவட்ட ஆட்சியர் அலுவலக அறிவிப்புப் பலகையில் தேர்தல் அலுவலர்கள் ஒட்டினர்.
இதுவரை பங்கேற்ற சட்டமன்றத் தேர்தல்களில் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் மனைவின் பெயர் என்ற இடத்தில் மோடி எதையும் குறிப்பிடாமல் இருந்து வந்தார். கடந்த 2012-ம் ஆண்டு குஜராத் சட்டமன்றத் தேர்தலில் கூட மனைவியின் பெயரை அவர் குறிப்பிடவில்லை.
இந்நிலையில், தற்போது முதல் முறையாக தனது மனைவி குறித்த தகவல்களை அதிகாரபூர்வமாக அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக திருமணம் தொடர்பான தகவலை மோடி வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ஒருவர் வலியுறுத்தி இருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக மோடியை பற்றி ஊடகங்களில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப் பட்டன. ஊடகங் களில் வெளியான அந்த செய்திகளுக்கு மோடி மறுப்புத் தெரிவிக்கவில்லை. அதே சமயம், அதை ஒப்புக்கொண்டதும் இல்லை.