இதர மாநிலங்கள்

பெண்களின் தொலைபேசி உரையாடலை ஒட்டு கேட்டவர் மோடி: ராகுல் தாக்கு

செய்திப்பிரிவு

பெண்களின் தொலைபேசி உரையாடலை ஒட்டுகேட்டவர் நரேந்திர மோடி என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

குஜராத்தில் இளம் பெண் ஒருவர் வேவு பார்க்கப்பட்ட சம்பவத்தை நினைவுகூரும் வகையில் ராகுல் இதனை குறிப்பிட்டார்.

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை பேசுகையில், “பெண்களுக்கு அதிகாரம் வழங்குவது குறித்து குஜராத் முதல்வர் பேசுகிறார். குஜராத்தில் பெண்களின் தொலைபேசி உரையாடலை ஒட்டுகேட்க நடவடிக்கை எடுத்தவர் மோடி. அம்மாநில போலீஸார் பெண்கள் மீது தடியடி நடத்தினர். பெண்களுக்கு அதிகாரம் வழங்குவது பற்றி பேசுவதற்கு முன், அவர்கள் முதலில் பெண்களை மதிக்கக் கற்றுக்கொள்ளட்டும்.

பாஜக ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தில் 20 ஆயிரம் பெண்கள் காணாமல் போயுள்ளனர். நாங்கள் பெண்களுக்கு அதிகாரம் வழங்க முற்படுகிறோம். ஆனால் பாஜக பெண்களுக்கான இடஒதுக்கீடு சட்டத்தை எதிர்க்கிறது.

நரேந்திர மோடி தனது ஒரு பொதுக்கூட்டத்துக்கு ரூ.10 கோடி செலவிடுகிறார். இதுதவிர பத்திரிகை விளம்பரத்துக்கும் செலவிடப்படுகிறது. இந்தப் பணம் அவர்கள் இனிப்பு உதாரணம் காட்டும் குஜராத்தில் இருந்து வருகிறது” என்றார் ராகுல்.

மகாராஷ்டிர மாநிலம் லட்டூரில் திங்கள்கிழமை பேசிய ராகுல், “குஜராத் வளர்ச்சியை உதாரணம் காட்டி மோடி பிரச்சாரம் செய்வது, இனிப்பு மிட்டாயை காட்டி ஏமாற்றுவதாகும். இந்த வளர்ச்சித் திட்டத்தால் அம்மாநிலத்தில் விவசாயிகள், ஏழைகளின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டு ஒரேயொரு தொழிலதிபர் மட்டுமே பலனடைந்துள்ளார்.

அவுரங்காபாத் நகருக்கு இணையான 45 ஆயிரம் ஏக்கர் நிலம் வெறும் ரூ. 300 கோடிக்கு தரப்பட்டுள்ளது. இங்கு 1 ரூபாய்க்கு மிட்டாய் வாங்கலாம். இந்த மிட்டாய் விலைக்கு 1 மீட்டர் நிலம் தரப்பட்டுள்ளது. இவை யாருடைய நிலம்? ஏழைகள் மற்றும் விவசாயிகளின் நிலம்” என்றார்.

SCROLL FOR NEXT