இதர மாநிலங்கள்

தேர்தலுக்குப் பிறகு மூன்றாவது அணி ஆட்சி அமைக்க வாய்ப்பு: சரத் பவார்

செய்திப்பிரிவு

தேர்தலுக்குப் பிறகு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளும் என நம்புகிறேன். ஒருவேளை பெரும் பான்மை கிடைக்காவிட்டால், மூன்றாவது அணி ஆட்சி அமைக் கும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறினார்.

இது தொடர்பாக செய்தியாளர் களிடம் சரத் பவார் மேலும் கூறிய தாவது: இன்றைய சூழ்நிலையில் மூன்றாவது அணி என்று எதுவும் இல்லை. தேர்தலுக்குப் பிறகுதான் மூன்றாவது அணி ஏற்பட வாய்ப்பு ஏற்படும்.

மூன்றாவது அணி அமைப்பது தொடர்பான முடிவை, காங்கிரஸுடன் கலந்து ஆலோசித்த பின்புதான் எடுப்போம். கூட்டாக (மற்ற கட்சிகளுடன் இணைந்து) இது தொடர்பாக முடிவு எடுப்போம்.

காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக ஆட்சி அமைக்க வேண்டுமானால், பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்க வேண்டும். அக்கட்சியால், அதை பெற முடியாது. அதே சமயம் காங்கிரஸிற்கோ அல்லது அக்கட்சி தலைமை வகிக்கும் ஐக்கிய முற் போக்குக் கூட்டணிக்கோ அறுதிப் பெரும்பான்மை கிடைக்கும் என என்னால் கூற முடியாது. ஒரு கவுரவமான வெற்றியைப் பெறுவோம்.

பிராந்திய கட்சிகளில் ஒன்றிரண்டு மட்டுமே நரேந்திர மோடியை ஆதரிக்கும். திரிண மூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, பாஜகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பில்லை. மம்தா பானர்ஜி, மேற்கு வங்க முதல்வராக தொடர்வதில்தான் அதிக விருப்பம் கொண்டுள்ளார். அவர் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரிக்க முடிவு செய்தால், 20 சதவீத ஆதரவாளர்களை இழக்க நேரிடும்.

20 சதவீத வாக்குகளை இழக்க அவர் ஒருபோதும் சம்மதிக்க மாட்டார். அதுபோன்ற சூழ்நிலையில், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசை ஆதரிக்க அவர் முன்வருவார்.

மம்தாவைப் போன்று பிஜு ஜனதா தளத்தின் தலைவர் நவீன் பட்நாயக், சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங், தெலங்கானா ராஷ்டிர சமிதி தலைவர் கே.சந்திரசேகர் ராவ், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோரும் பாஜகவை ஆதரிக்க மாட்டார்கள். இப்போதுள்ள சூழ்நிலையில் பாஜகவால் ஆட்சி அமைக்க முடியாது என்றே தெரிகிறது” என்றார்.

SCROLL FOR NEXT