ஞாயிற்றுக்கிழமை மாலை... வழக்கம் போல் தொலைக்காட்சி சேனல்களில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன.
மக்களிடம் பிரபலமாக உள்ள அந்த தனியார் சேனலில் தொகுப்பாளர்கள் இருவர் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக உள்ள பெண்ணின் நிறம் குறித்து கிண்டல் செய்தர். சுற்றியுள்ள பார்வையாளர்கள் அவர்களை உற்சாகப்படுத்த கைத்தட்ட... ஒருகட்டத்தில் அந்தத் தொகுப்பாளர்களின் வார்த்தைகளும்.. உடல் மொழியும் எல்லை மீறுகின்றன.
சேனலை மாற்றுவதைத் தவிர வழியில்லாமல் மாற்றினேன். இதில் அப்பெண் நிறம் சார்ந்து கிண்டல் செய்தவர்களும் அப்பெண்ணின் நிறத்தில்தான் இருந்தார்கள். இதில் எந்தவகையில் அவர்கள் அப்பெண்ணைவிட உயர்ந்தவர்கள் என்று கேலிச் சொற்களை வீசினார்கள்? இந்த வசைகளுக்குக்கெல்லாம் தான் தகுதியானவர் என்று சிரித்துக் கொண்டே ஏன் ஏற்கிறார்? இவற்றின் பின்னணியில் டிஆர்பி என்ற வணிக நோக்கம் இருந்தாலும் இத்தகைய நிகழ்ச்சிகள் குழந்தைகளிடமும், வளரும் இளம் பருவத்தினரிடமும் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும் என்ற குறைந்தபட்ச சமூகப் பொறுப்பு வேண்டும் அல்லவா?
இந்தியாவில் சாதியும், மதமும் எத்தகைய ஆதிக்கத்தைச் செலுத்துகிறதோ அதே அளவு ஆதிக்கத்தை சற்று வீரியத் தன்மையுடனே செலுத்துகிறது நிறம்.
உண்மையில் மேலை நாடுகளைவிட இந்தியாவிற்கு வெள்ளை நிறம் மீதான காதல் அதிகம். இதற்கு நமது நாட்டில் விற்பனையாகும் அழகு சாதனப் பொருட்களே சான்று.
நிறம் சார்ந்த பாகுபாடுகள் சொந்த வீட்டிலிருந்தே தொடங்கி விடுகின்றன. பின்னர் ஏதோ ஒரு வடிவத்தில் இது பள்ளி, கல்லூரி, அலுவலகம் என அனைத்து இடங்களிலும் தொடர்கிறது.
தொலைக்காட்சியில் பார்க்கும் விளம்பரம் முதல் திரைப்படம் உள்ள ஹீரோயின்களின் தேர்வுவரை வெள்ளை நிறம்தான் அழகு என்ற போதனையைத் தொடர்ந்து இன்றைய இளம் தலைமுறையினரிடத்தில் கொண்டு சென்று வருகின்றன. இதிலிருந்து ஆண்களும் தப்பிப்பதில்லை.
இதில், பிறக்கும் குழந்தை வெள்ளையாகப் பிறக்க வேண்டும் என்று மன அழுத்தத்துக்கு உள்ளாகும் தாய்மார்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது.
இந்த நிற அரசியலில் சிக்கிக்கொள்ளும் ஒரு பெருங்கூட்டம் மனரீதியாக சிறுவயதிலிருந்தே தொடர்ந்து பலவீனப்படுத்தப்படுகிறது.
இவர்களில் சிலர் தங்களை சமூகத்திலிருந்து தனிமைப்படுத்திக் கொள்கின்றனர். சமூகத்தின் போதனையை ஏற்றுக்கொண்டு சிலர் வெள்ளை நிறம்தான் அழகு என்று அதனை நோக்கி ஓடிவிடுகிறார்கள்.
இந்த சமூகச் சிக்கலுக்கு இடையே ’நான் கருப்பு... இதனால் எனக்கு லைக் வருவது சிரமம்’ என்று சமூக வலைதளங்களில் பலரும் கிண்டலாகப் பதிவிடுவதை விளையாட்டாகக் கடக்க முடியவில்லை. நிறம் சார்த்த பாகுபாடுகள் தொடந்து பொது தளத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
வெள்ளை நிறம் நமது சமூகத்தில் எவ்வளவு ஆதிக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதையும் இதனால் ஏற்படும் மன உளைச்சல்களையும் ஐடி துறையில் பணிபுரியும் இளம்பெண் ஒருவர் கூறும்போது, “இந்த வேறுபாட்டை நான் பள்ளியிலிருந்தே பார்த்து இருக்கிறேன். நன்றாக நடனம் ஆடத் தெரிந்தாலும் ஆசிரியர்கள் வெள்ளையாக இருக்கும் குழந்தைகளையே முன் வரிசையில் நிற்க வைப்பார்கள். இது இன்றளவும் தொடர்வதை நீங்கள் பள்ளியின் கலை விழாக்களில் பார்க்கலாம்.
மகாபாரதம் போன்ற இந்திய இதிகாசங்களில் கண்ணனும், திரெளபதியும் கருமை நிறம் கொண்டவர்கள் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், நமது தொலைக்காட்சி ஊடகங்கள் அவர்களை நமக்கு வெள்ளை நிறம் கொண்டவர்களாக அறிமுகப்படுத்தியது.
இதற்கு மாறாக தீய சக்திகளும், அவர்கள் காட்டும் கெட்டவர்களும் கருமை நிறம் கொண்டவர்களாக காட்சியமைக்கப்பட்டார்கள்.
திரைப்படங்களில் கருப்பு நிறக் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கக்கூட வெள்ளை நிறத்தில் இருக்கும் கதாநாயகிகளைத் தானே தேர்வு செய்கிறார்கள்?
இவ்வாறு இயல்பாகவே நம்மில் கருப்பு நிறம் சார்ந்த எதிரான மனநிலை கட்டமைக்கப்பட்டு நம்மில் பலர் அவர்கள் கொண்ட நிறத்துக்கு எதிரான மனநிலையை கொண்டவர்களாக மாற்றி இருக்கிறது.
இதில் வெள்ளை நிறம் தான் அழகு என்பதை பலரும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள்”என்றார்.
நிறம் சார்ந்து கிண்டல் செய்வது சட்டப்படி குற்றம் என்றே பலரும் அறிந்திருக்கவில்லை என்று கூறுகிறார் சமூகநல ஆர்வலரும் வழக்கறிஞருமான வெற்றிச் செல்வன்.
“உண்மையை கூறப்போனால் நிறம் சார்ந்து ஒருவரைக் கிண்டல் செய்வது என்பது ஒரு குற்றம் என்ற புரிதல் இங்கு பலருக்கு கிடையாது.
இதற்காக சட்டம் இருக்கிறது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுக்கலாம் என்று பலருக்கும் தெரிவதில்லை.
எனக்குத் தெரிந்தவரை இதுவரை எவரும் என்னை நிறம் சார்ந்து கிண்டல் செய்துவிட்டார் என்று புகார் கொடுத்ததாக நான் அறிந்திருக்கவில்லை. 1955 ஆம் ஆண்டு கொண்டு வந்த வன்கொடுமை சட்டம் ( பிசிஆர் சட்டம்) 'The Protection of Civil Rights’ வெறும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்று கருதுகிறார்கள்.
இந்தச் சட்டத்தில் மத ரீதியாக, இன ரீதியாக, நிற ரீதியாக துன்புறுத்துபவர்கள் மீது புகார் கொடுக்கலாம். ஆனால் இந்தச் சட்டத்தின் உள்ள சாராம்சத்தை அரசு மக்களிடம் முழுமையாக கொண்டு செல்லவில்லை. அதனால் இதைப் பற்றிய விழிப்புணர்வு குறைவாக இருக்கிறது” என்றார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், ஆப்பிரிக்க மாணவர்கள் வட மாநிலங்களில் தாக்குதலுக்கு உள்ளானார்கள். இந்தத் தொடர் தாக்குதல் நிகழ்வுகள் இந்தியாவில் நிறவெறி அதிகமாகிவிட்டதா? என்ற விவாதங்களை பரவலாக எழுப்பப்பட்டு பின்னர் மறைந்து விட்டது.
இத்தகைய விவாதங்கள் தொடர்ச்சியாக முன்னிறுத்தப்பட வேண்டும்.
எந்த நிறமாக இருந்தாலும் அந்நிறம் குறித்து பெருமிதம் கொள்ள வேண்டும் என்ற உரையாடல்கள் இல்லங்கள் மூலமாகவும், பள்ளிகள் மூலமாகவும் குழந்தைகளிடம் கொண்டு செல்ல வேண்டும்.
ஊடகம், சினிமா வளர்த்தெடுக்கும் நிறத்திற்குப் பின்னால் இருக்கும் வணிக அரசியலை முழுமையாகப் புரிந்து கொண்டு அதனை உடைப்பதற்கான மனநிலையை இளம் தலைமுறையினர் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
தொடர்புக்கு: indumathy.g@thehindutamil.co.in