ரா
மநாதபுரம் மாவட்டத் தின் கடைக்கோடி கிரா மம் சிறுகம்பையூர். 1965-களில் பேருந்துகளே பார்க்காத கிராமங்களில் இதுவும் ஒன்று. பள்ளி செல்ல நெடுந்தூரம் நடக்க வேண்டும். அப்படி ஒரு குக்கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர் தான் எம்.கே.கருப்பய்யா. கற்ற கல்வி கைகொடுக்க இப்போது எல்ஐசி எச்எப்எல் நிறுவனத்தில் தென் மண்டல மேலாளர். ஏழ்மையில் உழன்றெழுந்தவர் என்பதால் தன்னால் இயன்ற உதவிகளை செய்யத் தொடங்கினார்.
கருப்பய்யாவுக்கு 3 மகள்கள். குழந்தைகள் மீது கொள்ளைப் பிரியம். சேவையில் சிறந்தது மருத்துவ சேவைதான் என்பதால் 3 மகள்களையுமே மருத்துவம் படிக்க வைத்தார். எளிய மக்களுக்கு இலவசமாக அந்த சேவை கிடைக்க வேண்டும் என்ற எண்ணம்தான் அதற்கான அச்சாரம்.
மூத்த மகள் சூர்யா எம்பிபிஎஸ் சேர்ந்தார். வங்கி ஒன்றில் கல்விக்கடன் பெற்றதில் படிப்பு தொடர்ந்தது. மகளின் படிக்கும் ஆற்றல், மற்றவர்களுக்காக இரங்கும் குணத்தால் நெகிழ்ந்து போனார்.
சிறந்த மாணவியாக பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்று எம்பிபிஎஸ்ஸை வெற்றி கரமாக முடித்த சூர்யா, அடுத்த தாக முதுகலை படிக்க முடிவு செய்தார். பெற்றோரின் அரவணைப்பு, சகோதரிகளின் பாசம், நண்பர்களின் அக்கறை என உற்சாகத்துடன் வலம் வந்த சூர்யா, ஒருநாள் இறந்து போனார்.
2014 மார்ச் 13-ம் தேதி அந்த சம்பவம் நடந்தது. உடல் நலக்குறை வால் அவதிப்பட்ட சூர்யாவை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மர்மக் காய்ச்சல் எனச் சொல்லப்பட்டது. சிகிச்சைக்கு சென்ற ஒரு மணி நேரத்தில் சடலமாகத் தான் கிடைத்திருக்கிறார். பல உயிர்களைக் காக்க வேண்டி மருத்துவரானவர், இருந்த ஒரு உயிரையும் தொலைத்திருந்தார்.
உலகமே இருண்டு போய்விட் டது பெற்றோருக்கு. உயிராய் வளர்த்த மகளின் உயிரற்ற உட லை பார்ப்பதைவிட வேறு கொடு மை என்ன இருக்க முடியும். எல் லாம் முடிந்து திருவேலங்காடு சுடுகாடு சூர்யாவை சாம்பலாக்கி வைத்துக் கொண்டது.
சூர்யாவின் கடைசி தங்கைக்கு அப்போது பிளஸ் 2 பொதுத்தேர்வு. ஹாஸ்டலில் தங்கி படித்தவருக்கு அக்கா இறந்தது கூட தெரியாது. இந்தப் பேரிழப்பில் இருந்து மீள ஏது வழி?
அப்படி யோசித்து உருவானதுதான் ‘டாக்டர் சூர்யா கல்வி மற் றும் மருத்துவ அறக்கட்டளை’. ஆதரவற்ற முதியோர், சிறார்கள், மனவளர்ச்சிக் குன்றிய குழந்தைகள், அவலங்களில் இருந்து மீட்கப்பட்ட பெண்கள் என உதவிக் காக ஏங்கியவர்களுக்கு சூர்யா வின் பெயரால் உதவிகள் கிடைக்கின்றன. உணவு, உடை, மருத்துவம் என தேவைகளைக் கேட்டு கேட்டு செய்கின்றனர்.
“சூர்யாவை நான் இழந்திருக்கலாம். ஆனால் ஆதவற்றோர் இல்லங்களில் நான் பார்க்கும் அத்தனைபேரும் என் சூர்யாதான். மற்றவருக்கு சேவை செய்வதுதான் மகளுக்கு செலுத்தும் அஞ்சலி” என்கிறார் கருப்பய்யா.
அறக்கட்டளை டிரஸ்டிகளாக தாயார் மகமாயியும் தங்கை சந்திராவும் இருக்கின்றனர். அறக்கட்டளைக்கு தனியாக நிதி வசூல் எதுவும் செய்வதில்லை. மகள் உயிருடன் இருந்தால் அவருக்கு ஆகும் செலவு என்னவோ, அதை அவர் பங்காக எடுத்து வைத்துவிடுகிறார்கள். கணிசமாக சேர்ந்த தும் அதை இயலாதவர்களுக்கு செலவிடுகின்றனர். இப்படி ஒரு விளக்கால் நூறு விளக்கை ஏற்றுகின்றனர். அந்த நிம்மதி வெளிச்சத்தில் தங்கள் துக்கத்தை மறக்க முயற்சிக்கிறது சூர்யாவின் வீடு.