உரலில் குழவி சுற்றுவது போல சுற்றும் நபர் நிலையாக இருக்க கம்பு செயல்பட்டால் அது ‘சிலம்பம்’.
குழவி நிலைத்து நிற்க உரல் சுற்றுவதுபோல, கம்பு நிலைத்து நிற்க ஆடும் நபர் செயல்பட்டால் அது ‘மல்லர் கம்பம்’.
தமிழ் பெருநிலப் பரப்பை மன்னர்கள் ஆண்ட காலத்தில், இந்த விளையாட்டை போர் வீரர்கள் தங்கள் ஓய்வு நேரத்தில் விளையாடியுள்ளனர். தங்களின் பராக்கிரமச் செயலுக்கு வலுவேற்ற இந்த ‘மல்லர் கம்பம்’ அவர்களுக்கு சிறந்த பயிற்சியாக அமைந்தது. இந்த விளையாட்டு, சிறந்த உடற்பயிற்சியாகும்.
சோழர்களும், பல்லவர்களும் மல்லர் விளையாட்டை போற்றி பாதுகாத்தனர். அவர்களின் அரசவையில் தலை சிறந்த மல்லர்கள் இருந்தனர். மல்லர் விளையாட்டிலும் மல்யுத்தத்திலும் தலை சிறந்த முதலாம் நரசிம்மவர்ம பல்லவன் ‘மாமல்லன்’ என பெருமையோடு அழைக்கப்பட்டான் என்ற செவி வழிச் செய்தியும் உண்டு.
சம்பம், களரி, மல்யுத்தம், பிடிவரிசை, வர்மக்கலை போன்ற தற்காப்புக் கலை போல் மனிதன் உடலையும் மனதையும் கட்டுபடுத்தி வைக்க உதவும் யோகாசனம் தியானம் போல் மல்லர் கம்பமும் ஒரு தன்னிகரற்ற விளையாட்டாகும்.
மனதையும் உடலையும் கட்டுபடுத்தி செய்யும் உடற்பயிற்சி என்பதால் நம் முன்னோரால் போற்றி வளர்க்கப்பட்டது ‘மல்லர் கம்பம்’. மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில் இந்த மல்லர் விளையாட்டு இன்றளவும் பிரபலமாக உள்ளது. பத்துக்கும் மேற்பட்ட மாநில அரசுகள் இந்த மல்லர் விளையாட்டை அரசு விளையாட்டாக அங்கீகரித்துள்ளன. மகாராஷ்டிராவில் எந்த விழா தொடங்கப்பட்டாலும் இறைவணக்கத்துக்குப் பிறகு 5 நிமிடங்கள் மல்லர் பயிற்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தைப் பொறுத்தவரை அரிதாகி வரும் அபூர்வ கலைகளில் இதுவும் ஒன்றாகி விட்டது. இருப்பினும் விழுப்புரத்தில் இந்த ‘மல்லர் கம்பம்’ கடந்த பல ஆண்டுகளாக உயிர்ப்புடன் நிகழ்த்தப்பட்டு வருகிறது.
கடந்த மாதம் கூட விழுப்புரத்தில் தேசிய அளவிலான ‘மல்லர் கம்பம்’ விளையாட்டு போட்டியில் தமிழகம், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட 20 மாநிலங்களை சேர்ந்த 280 பேர் பங்கேற்றனர்.
மல்லர் கலையை விழுப்புரம் கெட்டியாக பிடித்து வைத்திருக்கிறது. இங்கு இந்த பாரம்பரிய வீர விளையாட்டை கற்றுத் தரும் மருதூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியரும் தமிழ்நாடு மல்லர் கம்பம் கழகத்தின் நிறுவனருமான உலகதுரையிடம் இதுபற்றி பேசினோம்.
“நான் கோவை உடற்கல்வி கல்லூரியில் படிக்கும்போது என் மானசீக குருவான செல்லதுரை, மதியழகன் ஆகியோரிடம் இருந்து இந்தக் கலையை கற்றேன். ஏறக்குறைய 30 ஆண்டுகளாக இந்த விளையாட்டை கற்று கொடுக்கிறேன்.
ஒரு சுதந்திர தின விழாவில் அப்போ தைய அமைச்சர் அரங்கநாயகம் முன்பு இந்த விளையாட்டை என் மாணவர்கள் நிகழ்த்தி காட்டினார்கள். 1999-ம் ஆண்டு சென்னையில் நடந்த தேசிய விளையாட்டு போட்டியில் தமிழகம் சார்பில் எங்கள் மாணவர்கள் முதலிடம் பிடித்தனர். அகில இந்திய அளவில் இந்த விளையாட்டு அங்கீகரிக்கப்பட்டுவிட்டது.
ஆனால் தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் இன்னமும் இந்த விளையாட் டை இணைக்காமல் உள்ளது.
ஒவ்வொரு முறை தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளிலும் மகாராஷ்ராவும் தமிழ்நாடும் இறுதி போட்டிக்கு தகுதி பெறும். 2002-ல் மத்தியபிரதேசம் புஷாவரில் நடந்த போட்டியில் தமிழ்நாடு 2-ம் இடம் பிடித்தது. 2007-ல் சென்னை சோழிங்கநல்லூரில் நடந்த போட்டியில் தமிழக அணி தங்கம் பெற்றது.
பேராண்மை, உடுப்பன் திரைப்படங்களில் எங்கள் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் எங்கள் மாணவர்கள் அதில் நடித்துள்ளனர். இந்த விளையாட்டை கற்க எந்தக் கட்டணமும் பெறுவதில்லை. பெண்களில் பருவமடையாத பெண்களுக்கு இந்த விளையாட்டை சொல்லி கொடுக்கிறேன்” என்கிறார் உலகதுரை.
தமிழ்நாடு தடகள கழகத்தை வெளியுலகத்துக்கு கொண்டு வந்த வால்டர் தேவாரம் போல இந்த விளையாட்டை உலகறியச் செய்யவும் பிரசித்தி பெற்றவர்கள் யாரும் முன்வரவில்லை என்பதே இவரின் குறையாக இருக்கிறது.
அமைச்சர் சி.வி.சண்முகம் விளையாட்டு துறை அமைச்சராக இருந்தபோது இந்த விளையாட்டை தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தில் இணைக்க முயற்சி எடுத்தார். அதற்கான பணி அமைச்சரவை மாற்றத்தால் நின்று போனது என்று தனது வருத்தத்தையும் தெரிவிக்கிறார்.
அண்மைக் காலமாக பிரேசில், ஜெர்மனி, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளில் மல்லர் கம்பம் விளையாட்டு பிரபலமடைய தொடங்கியிருக்கிறது. தமிழகமும் மல்லர் வீரர்கள் நிறைந்த மாநிலமாக மாறும் என நம்பிக்கை தெரிவிக்கிறார் உலகதுரை. மண்ணின் கலைகள் எதுவாகினும் அதை காப்பது நமது கடமை. அதில் மல்லர் கம்பமும் ஒன்று.