விவசாயம், அது சார்ந்த தொழில்கள் நிறைந்த பகுதி பொள்ளாச்சி. திராவிடக் கட்சிகளே இங்கு வெற்றிவாகை சூடியுள்ளன. கடந்த 5 மக்களவைத் தேர்தல்களில் 70% வாக்குப்பதிவே நடைபெற்றுள்ளது. கடந்த முறை அதிமுக எம்.பி.யாக இருந்த மகேந்திரனே இந்தமுறையும் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார்.
தனிப்பட்ட வகையில் மகேந்திரன் மீது ஊழல் குற்றச்சாட்டு இல்லை. பாலியல் குற்றச்சாட்டுகளின் தாக்கம் பொள்ளாச்சி நகரப் பகுதியில் மட்டுமே எதிரொலிக்கிறது. கிராமப் பகுதிகளில் அதன் தாக்கம் இல்லை. அதேபோல திமுக வேட்பாளர் சண்முகசுந்தரம் கூட்டணிக் கட்சியினரை அரவணைத்துச் செல்லவில்லை என்று கூறப்படுகிறது. அத்துடன் கடைசி நேரத்தில் மேற்கொள்ளப்படும் பணப்பட்டுவாடா பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இதுதவிர தொண்டாமுத்தூர் பகுதியில் வசிக்கும் முஸ்லிம் வேட்பாளர்களின் ஓட்டுகளை அமமுக வேட்பாளர் முத்துக்குமார் பிரிப்பார். 1.5 லட்சம் புதிய தலைமுறையின் வாக்குகளை அமமுகவும் மக்கள் நீதி மய்யமும் பகிர்ந்துகொள்ளும். எனவே இந்த முறை முந்தைய தேர்தலைப் போல அல்லாமல், 50 முதல் 80 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மகேந்திரன் வெற்றிபெறுவார் என்றே கூறப்படுகிறது.
தொகுதி குறித்த கருத்துக் கணிப்பு
கருத்துக் கணிப்பு முடிவின்படி, பல தொகுதிகளில் காணும் நிலவரத்தைப் போல அதிமுகவின் வாக்குகளை அமமுக பொள்ளாச்சி தொகுதியிலும் பிரிக்கிறது. இது திமுக வேட்பாளர் கு.சண்முக சுந்தரத்துக்கு சாதகமாக அமைவதால் அவருக்கு வெற்றிக்கான வாய்ப்பாக அமைகிறது. அதிமுகவின் சி.மகேந்திரன் 2-ம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சனுஜா 3-ம் இடத்திலும், அமமுகவின் முத்துக்குமார் 4-ம் இடத்திலும் உள்ளனர்.
முக்கிய குறிப்பு:
இது தொகுதிவாரியான வாக்காளர்கள் அளித்துள்ள வாக்கு விகிதம் அல்ல. கட்சி அல்லது வேட்பாளர் மீது அபிமானம் கொண்டவர்கள் எங்கிருந்தாலும் இந்த வாக்களிப்பில் கலந்துகொள்ளலாம் என்பதால், குறிப்பிட்ட கட்சி அல்லது வேட்பாளருக்கு ஆதரவான/எதிப்பான இணையதள வாசகர்களின் மனநிலையையே இந்த வாக்களிப்பு காட்டுகிறது. அதை மனதில் கொண்டு இந்த முடிவுகளை அணுகும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
மற்ற தொகுதிகள் குறித்த விவரங்கள காண: