கமல் தொகுப்பாளராக இருந்து ஒளிபரப்பான 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் இறுதிச் சுற்றுவரை வந்து தமிழக மக்களின் மனங்களில் இடம்பிடித்த கவிஞர், பாடலாசிரியர் சினேகன் தான் இப்போது மக்கள் நீதி மய்யக் கட்சியின் சார்பில் சிவகங்கை மக்களவைத் தொகுதியில் களமிறக்கப்பட்டிருக்கும் வேட்பாளர்.
பாஜக சார்பில் எச்.ராஜாவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய அதன் தேசியத் தலைவர் அமித் ஷா வருகிறார். காங்கிரஸ் சார்பில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் களமிறங்கியுள்ளார். இந்நிலையில் இதை சிவகங்கை தொகுதியின் மக்கள் நீதி மய்ய வேட்பாளர் சினேகன் எப்படி உணர்கிறார், கள நிலவரம் எப்படி இருக்கிறது, கமலின் அரசியல் ஆளுமை குறித்து 'இந்து தமிழ் திசை' இணையதளம் சார்பில் கேட்டோம்.
நட்சத்திர அந்தஸ்து பெற்றிருக்கிறது சிவகங்கை தொகுதி. தேசிய கவனம் பெற்றுள்ள தொகுதியில் ஓர் அறிமுகக் கட்சியின் வேட்பாளராக எப்படி உணர்கிறீர்கள்?
மக்கள் யாரும் அப்படி எங்களை அறிமுகக் கட்சியாக நினைக்கவில்லை. நான் இங்கே ஒவ்வொரு தெருவாக, ஒவ்வொரு வீடாகச் சென்று வருகிறேன். செல்லுமிடமெல்லாம் மக்கள் ஆதரவு பலமாக இருக்கிறது. முக மலர்ச்சியோடு எங்களை வரவேற்கின்றனர். முதல் தலைமுறை வாக்காளர்கள் உற்சாகமாகக் கொண்டாடுகிறார்கள். 18 வயது வாக்காளரும் சரி 90 வயது வாக்காளரும் சரி மாற்றத்தை விரும்புகிறார்கள். தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள். அதனால் அவர்கள் எங்களை அறிமுகக் கட்சியாக அல்ல மாற்று அரசியலுக்கான அடையாளமாகவே பார்க்கிறார்கள்.
பிரச்சாரப் பயணத்தின் அனுபவங்களைச் சொல்லுங்கள்..
பிரச்சாரத்திற்கு காங்கிரஸும் பாஜகவும் நிதியோடு வருகிறார்கள். நாங்கள் நீதியுடன் நின்று கொண்டிருக்கிறோம். அவர்கள் 10 கார்களில் சென்றாலும் பிரச்சினை வரவில்லை. நாங்கள் 3 கார்களில் சென்றாலே இடையூறு செய்துவிடுகின்றனர். ஒவ்வொரு நாள் பிரச்சாரமுமே சவாலாக இருக்கிறது.
டெல்லியில் ஆம் ஆத்மி ஏற்படுத்தியது போல் தமிழகத்தில் மநீம தாக்கத்தை ஏற்படுத்துமா?
நிச்சயமாக ஏற்படுத்தும். கடந்த இரண்டு நாட்களாக தொகுதியில் கெடுபிடிகள் அதிகமாக இருக்கின்றன. இங்கு மட்டுமல்ல மாநிலம் முழுவதும் எங்கள் பிரச்சாரத்துக்கு ஆளுங்கட்சியினர் இடையூறு செய்கின்றனர். இதுவே எங்கள் வெற்றிக்கான அடித்தளமாகத்தான் நாங்கள் பார்க்கிறோம். நான் எந்தத் தெருவில் பிரச்சாரம் செய்தாலும் அடுத்த 10 நிமிடங்களில் பாஜக, காங்கிரஸ் கட்சியினர் அங்கு வந்துவிடுகின்றனர். நான் கண்காணிக்கப்படுகிறேன். நாங்கள் வேகமாக ஓடுவதாலேயே கண்காணிக்கப்படுகிறோம். மிரட்டல்கள் வருகின்றன. இது எங்கள் முன்னேற்றத்தின் முதல் அறிகுறி.
அதிமுக, திமுக, அமமுக என்று கட்சிகள் மக்களால் வரிசைப்படுத்தப்படுகிறது. தேர்தல் களத்தில் அமமுகவை எப்படிப் பார்க்கிறீர்கள்?
மக்களவைத் தேர்தலில் எங்களுக்கு நேரடிப் போட்டி காங்கிரஸும், பாஜகவும்தான். மாநில அரசியலில் திமுக, அதிமுகவையே போட்டியாகக் கருதுகிறோம். எங்களைப் பொறுத்தவரை அமமுக அதிமுகவின் இன்னொரு அணி. டிடிவி தினகரன் அதிமுகவில் இழந்த உரிமையை மீட்க அமமுகவை ஆரம்பித்திருக்கிறார்.
நாளைக்கே ஈபிஎஸ், ஓபிஎஸ்ஸை மடக்கியதுபோல் ஈபிஎஸ், ஓபிஎஸ் இணைந்து டிடிவியை மடக்கலாம். அப்போது எல்லோரும் ஐக்கியமாகலாம்.
ஆனால், மக்கள் நீதி மய்யம் மக்கள் நலனுக்காக ஆரம்பிக்கப்பட்டது. டிடிவியின் போராட்டம் உரிமைப் போராட்டம். அதைக் குறை சொல்வதற்கில்லை. எங்கள் போராட்டம் மாநில அதிகாரத்தை மீட்கும் போராட்டம்.
சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வருவது குறித்து நிலவும் விமர்சனம் பற்றி...
புரிதல் இல்லாததாலேயே விமர்சனம் எழுகிறது. ஒரு கலைஞனுக்கு சமூகப் பார்வை அதிகமாக இருக்கும். கலைஞன் மக்களின் மனதை நேரடியாகத் தொடுபவன். அதனால்தான் தமிழகத்தில் கலைத்துறையினர் அரசியலில் வாகை சூட முடிந்தது. கலைஞர்கள் அரசியல்வாதிகள் ஆவதில் எந்தத் தவறும் இல்லை.
அப்படியென்றால், கமல்ஹாசன் தமிழகத்தின் பிக் பாஸாக இருப்பாரா?
ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் பிக் பாஸாக இருப்பார். அதனால்தான் இழந்துபோன தமிழர்களின் மாண்பை மீட்டெடுப்போம் என்று தேர்தல் வாக்குறுதியில் கூறியிருக்கிறார்.
மக்கள் நீதி மய்யம் பற்றி ஒரு கவிதை சொல்லுங்களேன்..
மக்களுக்கான அரசியல்
மக்களுக்கான ஆட்சி
மக்களுக்கான அதிகாரம்
மக்கள் நீதி மய்யமே தரும்...