ஆரணி

கள நிலவரம்: ஆரணி தொகுதி யாருக்கு?

செய்திப்பிரிவு

நீண்டகாலமாக வந்தவாசி மக்களவைத் தொகுதியாக இருந்து வந்த இந்தத் தொகுதி தொகுதி மறுசீரமைப்புக்குப் பின் 2009-ல் ஆரணி மக்களவைத் தொகுதியாக உருவெடுத்தது.

வந்தவாசி தொகுதியில் தொடக்க காலத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களே இந்தத் தொகுதியில் வெற்றி பெற்று வந்துள்ளனர். கூட்டணியில் காங்கிரஸுக்கே இந்தத் தொகுதி ஒதுக்கப்படுவது வாடிக்கை. காங்கிரஸ் காலத்துக்குப் பிறகும் அதிமுக, திமுக ஆகியவை இந்தத் தொகுதியை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்குவது வழக்கமாக இருந்துள்ளது. அதிமுக, திமுகவைத் தவிர பாமகவுக்கும் ஓரளவு வாக்கு வங்கி கொண்ட தொகுதி.

காங்கிரஸ் மூத்த தலைவர்களான கிருஷ்ணசாமி, பலராமன் போன்றோரும், பாமகவின் துரை, மதிமுகவின் செஞ்சி ராமசந்திரன் போன்றோர் இத்தொகுதியில் எம்.பி.யாக இருந்துள்ளனர்.

நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில், செஞ்சி வெ.ஏழுமலை (அதிமுக), எம்கே. விஷ்ணுபிரசாத் (காங்கிரஸ்), செந்தமிழன் (அமமுக), சாஜி( மநீம) தமிழரசி (நாம் தமிழர்) உள்ளிட்ட வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

அதிமுகவில் தற்போதைய எம்.பி.யே மீண்டும் போட்டியிடும் சூழலில் அவர் மீதான அதிருப்தி எதிரொலிக்கிறது. இருப்பினும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுவதால் அது தங்களுக்குச் சாதகம் என்கின்றனர் அதிமுகவினர். காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத், பாமக நிறுவனர் ராமதாஸின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் வெளியூர் வேட்பாளர் எனக்கூறி அதிமுகவினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.இருந்தாலும் விஷ்ணு பிரசாத்துக்கே வெற்றி வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

தொகுதி குறித்த கருத்துக் கணிப்பு

ஆரணி தொகுதியில் 2-வது முறையாக களம் இறங்கியுள்ளார் அதிமுக வேட்பாளர் செஞ்சி ஏழுமலை. இவரைப் பின்னுக்குத் தள்ளி திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் முன்னேறியுள்ளார். கருத்துக் கணிப்பு முடிவின்படி இத்தொகுதியில் செஞ்சி ஏழுமலை 2-ம் இடத்தில் உள்ளார். அமமுக வேட்பாளர் செந்தமிழனும், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் தமிழரசியும் 3-ம் இடத்தில் உள்ளனர்.

முக்கிய குறிப்பு: 

இது தொகுதிவாரியான வாக்காளர்கள் அளித்துள்ள வாக்கு விகிதம் அல்ல. கட்சி அல்லது வேட்பாளர் மீது அபிமானம் கொண்டவர்கள் எங்கிருந்தாலும் இந்த வாக்களிப்பில் கலந்துகொள்ளலாம் என்பதால்,  குறிப்பிட்ட கட்சி அல்லது வேட்பாளருக்கு ஆதரவான/எதிப்பான இணையதள வாசகர்களின் மனநிலையையே இந்த வாக்களிப்பு காட்டுகிறது. அதை மனதில் கொண்டு இந்த முடிவுகளை அணுகும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

மற்ற தொகுதிகள் குறித்த விவரங்கள காண:

SCROLL FOR NEXT