கோழி முட்டை ஏற்றுமதிக்குப் புகழ்பெற்ற நகரம் நாமக்கல். நாட்டில் 90% முட்டைகள் நாமக்கல்லில் இருந்துதான் உற்பத்தி ஆகின்றன. லாரி சார்ந்த தொழில்கள், ஆழ்துளைக் கிணறு ஆகியவற்றுடன் விவசாயமும் இங்கே பிரதானமாக உள்ளது.
அதிமுக சார்பில் அக்கட்சியின் மாவட்டப் பொருளாளர் பி. காளியப்பன் போட்டியிடுகிறார். திமுக கூட்டணியில் கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் ஏ.கே.பி.சின்ராஜ் களம் காண்கிறார். இந்த இரு கட்சிகளுக்கும் இடையேதான் போட்டி நிலவுகிறது.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் தங்கமணி, வேட்பாளர் காளியப்பனுக்காகத் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இரு கட்சிகளுமே தீவிரமாகத் தொகுதி முழுக்கப் பரப்புரையில் ஈடுபட்டுள்ளன. எனினும் காளியப்பனுக்கு கடைநிலைத் தொண்டர்கள் மத்தியில் அதிக அறிமுகம் இல்லாதது பின்னடைவாக உள்ளது, அதேபோல அதிமுகவில் இருந்து பிரிந்த அமமுக வேட்பாளர் சாமிநாதனும் அதிமுக ஓட்டுகளைக் கணிசமாகப் பிரிப்பார்.
கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சங்கத் தலைவராக இருக்கும் சின்ராஜ், தொகுதி முழுக்கப் பிரபலமானவர். இவருக்காகப் பணியாற்ற வெளி மாவட்டங்களைச் சேர்ந்த கொமதேக இளைஞர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர். திமுகவும் இணைந்து பணியாற்றுவதால், சின்ராஜுக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது.
தொகுதி குறித்த கருத்துக் கணிப்பு
நாமக்கல் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் கொமதெக கட்சியைச் சார்ந்த ஏ.கே.பி.சின்ராஜ் முந்துகிறார். அதிமுக வேட்பாளர் காளியப்பன் இரண்டாம் இடத்திலும், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் பாஸ்கர் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். அமமுக வேட்பாளர் சாமிநாதன் நான்காம் இடத்தில் உள்ளார்.
முக்கிய குறிப்பு:
இது தொகுதிவாரியான வாக்காளர்கள் அளித்துள்ள வாக்கு விகிதம் அல்ல. கட்சி அல்லது வேட்பாளர் மீது அபிமானம் கொண்டவர்கள் எங்கிருந்தாலும் இந்த வாக்களிப்பில் கலந்துகொள்ளலாம் என்பதால், குறிப்பிட்ட கட்சி அல்லது வேட்பாளருக்கு ஆதரவான/எதிப்பான இணையதள வாசகர்களின் மனநிலையையே இந்த வாக்களிப்பு காட்டுகிறது. அதை மனதில் கொண்டு இந்த முடிவுகளை அணுகும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
மற்ற தொகுதிகள் குறித்த விவரங்கள காண: