ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், திமுக சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி, அமமுக சார்பில் வதுந ஆனந்த் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
நயினார் நாகேந்திரன் பாஜகவில் இருந்தாலும் அவர் அதிமுக முன்னாள் அமைச்சர் என்பதால் அதிமுகவினர் அங்கு அவருக்காக முழு வீச்சில் வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
அமித் ஷாவின் நேரடித் தேர்வு என்பதாலும், பியூஷ் கோயலே களத்துக்கு வந்து பிரச்சாரம் செய்து சென்றதாலும் தொகுதியில் அவருக்கு பாஜக நிர்வாகிகளின் ஆதரவு இருக்கிறது.
வெற்றி பெற்றால் அமைச்சர்தான் என்று மார்தட்டிக் கொண்டிருக்கிறார் நயினார் நாகேந்திரன் என அவரது நெருங்கிய வட்டாரத் தகவல்கள் சொல்கின்றன. அறந்தாங்கி, திருச்சுழி தொகுதிகள் இவருக்கு சற்று கடினமாகவே இருக்கும் என்கிறது கள நிலவரம்.
இவரும் அதிமுக பின்னணி கொண்டவர், அமமுக சார்பில் போட்டியிடும் ஆனந்தும் அதிமுக பின்னணி கொண்டவர். இவரது தந்தை வ.து.நடராஜன் அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் என்பதால் இப்போதும்கூட சில அதிமுக மாவட்ட அளவிலான புள்ளிகள் அவருக்கு ஆதரவாக செயல்படுகின்றனராம். ஆனந்த அதிமுக அதிருப்தி ஓட்டுகள் சிலவற்றை அறுவடை செய்வார் எனத் தெரிகிறது.
ஆனால், போட்டி என்றால் நயினார் நாகேந்திரனுக்கும் திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ் கனிக்கும் இடையேதான் நிலவுகிறது. நவாஸ் கனியின் பண பலம் திமுகவின் அரசியல் செல்வாக்கு என்று கணித்தே இவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். தொகுதியில் செலவுகளுக்கு அஞ்சாமல் காசை இறைக்கும் தொழிலதிபரான நவாஸ் கனியும் வெளியூர்க்காரரே.
நயினார், நவாஸ் என இருவருமே வெளியூர் வேட்பாளர்களாக இருந்தாலும் நயினாரின் அரசியல் அனுபவம் அவருக்கு சாதகமாக உள்ளது. சிறுபான்மையினர் வாக்குகள், முதுகுளத்தூர், திருச்சுழி தொகுதி வாக்குகள் எல்லாம் நவாஸ் கனிக்கு சாதகமாக உள்ளன. வடக்கே காசி, தெற்கே ராமேஸ்வரம் என்ற பாஜகவின் வியூகம் மதச்சார்பின்மை கொள்கை கொண்டவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்துக்கள் வாக்குகளைப் பெற பாஜக கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளது.
நயினார் நாகேந்திரனுக்கு ராமநாதபுரம், பரமக்குடி, திருவாடானை தொகுதி வாக்குகள் பலமாக இருக்கும் எனக்கூறப்படுகிறது. அறந்தாங்கி வாக்குகளை அமமுகவின் ஆனந்த் குறிவைத்துள்ளார்.
தொகுதியில் எந்தக் கட்சியின் கூட்டம் நடந்தாலும் மக்களைத் திரட்ட ரூ.300 கொடுக்கப்படுகிறதாம். ஆனால், அதுதவிர வாக்காளர்களுக்கு பணம் என்ற பேச்சு இப்போதைக்கு இல்லை. கடைசி 5 நாட்களில் வாய்ப்பிருக்கிறது எனக் கூறப்படுகிறது.
2019- மக்களவைத் தேர்தல்: போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்
நயினார் நாகேந்திரன் (பாஜக)
நவாஸ் கனி (இ.யூ.மு.லீக்)
வது.ந ஆனந்த் (அமமுக)
விஜயபாஸ்கர் (மநீம)
புவனேஸ்வரி (நாம் தமிழர்)
தொகுதி குறித்த கருத்துக் கணிப்பு
ராமநாதபுரம் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி ஏணி சின்னத்தில் போட்டியிடுகிறார். அவர் வெற்றி வேட்பாளர் என்று கருத்துக் கணிப்பு உறுதிப்படுத்தியுள்ளது. இரண்டாம் இடத்தில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனும், அமமுக வேட்பாளர் வ.து.ந ஆனந்த் 3-வது இடத்திலும் உள்ளனர்.
முக்கிய குறிப்பு:
இது தொகுதிவாரியான வாக்காளர்கள் அளித்துள்ள வாக்கு விகிதம் அல்ல. கட்சி அல்லது வேட்பாளர் மீது அபிமானம் கொண்டவர்கள் எங்கிருந்தாலும் இந்த வாக்களிப்பில் கலந்துகொள்ளலாம் என்பதால், குறிப்பிட்ட கட்சி அல்லது வேட்பாளருக்கு ஆதரவான/எதிப்பான இணையதள வாசகர்களின் மனநிலையையே இந்த வாக்களிப்பு காட்டுகிறது. அதை மனதில் கொண்டு இந்த முடிவுகளை அணுகும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
மற்ற தொகுதிகள் குறித்த விவரங்கள காண: