சிவகங்கை தொகுதியில் திருப்பத்தூர், காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, ஆலங்குடி, திருமயம் ஆகிய 6 பேரவைத் தொகுதிகள் உள்ளன. பாஜக வேட்பாளர் எச். ராஜா முழுமையாக அதிமுகவை நம்பியே களம் இறங்கி உள்ளார்.
சிவகங்கை, காரைக்குடி தொகுதிகளில் அதிமுகவில் முக்குலத்தோர் வாக்குகளைப் பிரிக்க அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டி முயற்சித்து வருகிறார். இது எச். ராஜாவுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் களம் இறங்கியிருப்பதன் மூலம் அவருக்கான வெற்றி வாய்ப்பு அதிகம் என்று சொல்லப்படுகிறது. சீட் கொடுக்காத அதிருப்தியில் இருந்த சுதர்சன நாச்சியப்பனும் மவுனம் ஆகிவிட்ட நிலையில் கார்த்தி சிதம்பரத்துக்காக காங்கிரஸும், திமுகவும் மிகக் கடுமையாக வேலை செய்துகொண்டிருக்கின்றன. கார்த்தி சிதம்பரத்தின் மீதான வழக்குகள், குற்றச்சாட்டுகள் எதுவும் அவர் வாக்கு வங்கியைப் பாதிக்காது என்றும் சொல்லப்படுகிறது.
மக்கள் நீதி மய்யம் சார்பில் சினேகன் போட்டியிடுகிறார். ஆனால், அவர் சிவகங்கை தொகுதி மக்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தமாட்டார் என்று கணிக்கப்படுகிறது.
தொகுதி குறித்த கருத்துக் கணிப்பு
தமிழகத்தில் பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ள தொகுதி சிவகங்கை. பாஜக சார்பில் எச்.ராஜாவும், காங்கிரஸ் சார்பில் கார்த்தி சிதம்பரமும், அமமுக சார்பில் தேர்போகி வி.பாண்டியும் களமிறங்கியுள்ளதால் கள நிலவரப்படி இங்கு மும்முனைப் போட்டி நிலவுகிறது. கருத்துக் கணிப்பு முடிவின்படி, கார்த்தி சிதம்பரம் முதலிடத்தில் உள்ளார். பாஜகவின் எச்.ராஜா இரண்டாம் இடத்தில் உள்ளார். அமமுகவின் தேர்போகி வி.பாண்டி 3-ம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சக்திப்ரியா 4-ம் இடத்தில் உள்ளார்.
முக்கிய குறிப்பு:
இது தொகுதிவாரியான வாக்காளர்கள் அளித்துள்ள வாக்கு விகிதம் அல்ல. கட்சி அல்லது வேட்பாளர் மீது அபிமானம் கொண்டவர்கள் எங்கிருந்தாலும் இந்த வாக்களிப்பில் கலந்துகொள்ளலாம் என்பதால், குறிப்பிட்ட கட்சி அல்லது வேட்பாளருக்கு ஆதரவான/எதிப்பான இணையதள வாசகர்களின் மனநிலையையே இந்த வாக்களிப்பு காட்டுகிறது. அதை மனதில் கொண்டு இந்த முடிவுகளை அணுகும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
மற்ற தொகுதிகள் குறித்த விவரங்கள காண: