சிவகங்கை மக்களவைத் தொகுதியில் பிரச்சாரம் செய்ய காங்கிரஸ் தலைவர்கள் யாரும் வராததால் தந்தை ப.சிதம்பரத்தின் பிரச்சாரத்தையே கார்த்தி சிதம்பரம் நம்பி உள்ளார்.
சிவகங்கை தொகுதிக்கு சீட் வாங்கவே கார்த்தி சிதம்பரம் படாதபாடு பட்டார். பல்வேறு கட்டப் போராட்டங்களுக்கு பிறகு தந்தை ப.சிதம்பரத்தின் பகீரத பிரயத்தனத்தால் சீட் வாங்கினார். மேலும் அவர் மீது சிபிஐ, அமலாக்கத்துறை வழக்குகள் நிலுவையில் இருப்பதால் இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
தற்போது பிரச்சாரம் தீவிரம் அடைந்த நிலையில் கார்த்தி சிதம்பரத்துக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய, சொல்லிக் கொள்ளும்படியாக காங்கிரஸ் தலைவர்கள் யாரும் வரவில்லை.
காரைக்குடியில் நடந்த கூட்டணிக் கட்சியினரின் ஆலோசனைக் கூட்டத்துக்கு மட்டும் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத் வந்து சென்றார். இதனால் தந்தை ப.சிதம்பரத்தின் பிரச்சாரத்தையே கார்த்தி சிதம்பரம் முழுமையாக நம்பியுள்ளார்.
இதனால் சிதம்பரமும் வேறு தொகுதிகளுக்கு பிரச்சாரத்துக்குச் செல்லாமல் மகனுக்காக சிவகங்கையிலேயே முடங்கி உள்ளார். மேலும் கார்த்தி சிதம்பரத்துக்கு கைகொடுக்கும் வகையில் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் தான் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இதுவரை அவரை ஆதரித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், நடிகர் உதயநிதி ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், தி.க. தலைவர் கி.வீரமணி போன்றோர் பிரச்சாரம் செய்துள்ளனர். தொடர்ந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
காங்கிரஸார் கூறியதாவது: முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் திருநாவுக்கரசர், ஈவிகேஎஸ். இளங்கோவன் போன்றோர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். வடமாநிலத் தலைவர்களில் பலர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். தங்கபாலு கேரள மாநிலம், வயநாடு தொகுதிக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர்கள் பிரச்சாரத்துக்கு வர முடியவில்லை. விரைவில் மாநிலத் தலைவர் கேஎஸ். அழகிரி பிரச்சாரம் செய்ய உள்ளார்.
ராகுல்காந்தியை அழைத்து வர முயற்சித்து வருகிறோம் என்றனர்