காவிரி பாசன விவசாயப் பகுதியான மயிலாடுதுறை தொகுதி முழுக்க முழுக்க விவசாயத்தை மையமாகக் கொண்டு இயங்குகிறது.
பெரிய அளவில் தொழில் வாய்ப்புகள் இல்லாத நிலையில் விவசாயமே இந்தப் பகுதியின் உயிர் மூச்சு. அரசியலைப் பொறுத்தவரையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் நீண்டகாலமாக எம்.பி.யாக இருந்த தொகுதி. வழக்கமாகவே காங்கிரஸ் பாரம்பரிய தொகுதியாகவே இருந்துள்ளது. எனினும் அதிமுக மற்றும் திமுகவின் ஆதரவுடனேயே காங்கிரஸ் அதிகமுறை வென்றுள்ளது.
இந்நிலையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எஸ்.ஆசைமணி (அதிமுக), செ.இராமலிங்கம் (திமுக), எஸ். செந்தமிழன் (அமமுக), ரிஃபாயுதீன் (மநீம) சுபாஷினி (நாம் தமிழர்) போட்டியிடுகின்றனர். இதில் திமுகவின் திருவிடைமருதூர் ராமலிங்கம் மூன்று முறை எம்எல்ஏவாக இருந்தவர். மேலும் போட்டியில்லாமல் ஒன்றியச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அதுவும் இல்லாமல் மயிலாடுதுறையில் வன்னிய சமூகத்தினர் அதிகம்.
செ. ராமலிங்கமும் வன்னியர் பின்னணியைக் கொண்டவர். அதிமுகவின் ஆசைமணி இந்தத் தொகுதிக்கு முற்றிலும் புதிது. இவர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் குற்றாலத்தில் சட்டப்பேரவை வேட்பாளராக வென்றிருக்கிறார். ஆனால் இப்போது இருக்கும் கள நிலவரம் வேறு. அமமுக சார்பாக எஸ். செந்தமிழன் போட்டியிடுகிறார் இவர் தேர்தலுக்கு செலவு செய்யவே தயக்கம் காட்டுகிறார். இவர்களை ஒப்பிடும்போது திமுக வேட்பாளர் செ. ராமலிங்கம்தான் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கள நிலவரங்கள் கூறுகின்றன.
தொகுதி குறித்த கருத்துக் கணிப்பு
மயிலாடுதுறை தொகுதி திமுகவுக்கு சாதகமாக உள்ளது. திமுக வேட்பாளர் செ.ராமலிங்கம் முதலிடத்தில் உள்ளார். கருத்துக் கணிப்பின்படி, அதிமுக வேட்பாளர் எஸ்.ஆசைமணி இரண்டாம் இடத்தில் உள்ளார். 3-ம் இடத்தில் நாம் தமிழர் கட்சி உள்ளது.
முக்கிய குறிப்பு:
இது தொகுதிவாரியான வாக்காளர்கள் அளித்துள்ள வாக்கு விகிதம் அல்ல. கட்சி அல்லது வேட்பாளர் மீது அபிமானம் கொண்டவர்கள் எங்கிருந்தாலும் இந்த வாக்களிப்பில் கலந்துகொள்ளலாம் என்பதால், குறிப்பிட்ட கட்சி அல்லது வேட்பாளருக்கு ஆதரவான/எதிப்பான இணையதள வாசகர்களின் மனநிலையையே இந்த வாக்களிப்பு காட்டுகிறது. அதை மனதில் கொண்டு இந்த முடிவுகளை அணுகும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
மற்ற தொகுதிகள் குறித்த விவரங்கள காண: