காஞ்சிபுரம்

கள நிலவரம்: காஞ்சிபுரம் தொகுதி யாருக்கு?

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் அதிமுக, திமுக இடையே கடும் போட்டி நிலவும். எனினும், அமமுக வேட்பாளர் முனுசாமியால் சிதறும் வாக்குகளை பொறுத்தே வெற்றி வாய்ப்பு என்ற சூழ்நிலை உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் காஞ்சிபுரம் என இரண்டு மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில், காஞ்சிபுரம் (தனி) தொகுதியாக உள்ளது. 2008-ம் ஆண்டு நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு இரண்டு தேர்தல்களைச் சந்தித்துள்ள இத்தொகுதியில் காங்கிரஸ் மற்றும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், தற்போது நடைபெறும் மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் ஏற்கெனவே இத்தொகுதியின் எம்.பி.யாக உள்ள மரகதம் குமரவேலும், திமுக சார்பில் கடந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வி பெற்ற செல்வம் மீண்டும் போட்டியிடுகின்றனர்.

கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், தேர்தல் வெற்றிக்குப் பிறகு தொகுதி மக்களைச் சந்திக்கவில்லை என்ற குற்றச்சாட்டும், மீனவர்களின் கோரிக்கைகள் ஒன்றுகூட நிறை வேற்றவில்லை என மீனவ கிராமங்களில், அதிமுக வேட்பாளர் மீது கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த தேர்தல் தோல்வி பெற்ற செல்வம் மீண்டும் போட்டியிடுவதும் மற்றும் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் உள்ள செங்கல்பட்டு, செய்யூர், உத்திரமேரூர், மதுராந்தகம், காஞ்சிபுரம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றிருப்பதல், திமுகவுக்குச் சாதகமாக உள்ளது.

எனினும், திமுக வேட்பாளரின் மீது பொதுமக்கள் மத்தியில் ஈர்ப்பு இல்லாத நிலை உள்ளது. திருப்போரூர் சட்டப்பேரவை தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. மேலும், அமமுக வேட்பாளர் முனுசாமி மூலம் அதிமுகவின் வாக்குகள் சிதறும் நிலை உள்ளது. இதனால், அதிமுக, திமுக இடையே கடும் போட்டி நிலவும் சூழல் உள்ளது.

தொகுதி குறித்த கருத்துக் கணிப்பு

காஞ்சிபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் மரகதம் குமரவேல் மீண்டும் களம் காண்கிறார். ஆனால், திமுக வேட்பாளர் ஜி.செல்வம் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவார் என்று கருத்துக் கணிப்பு முடிவுகள் சொல்கின்றன. 2-ம் இடத்தில் அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேலும், 3-ம் இடத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ரஞ்சனியும் உள்ளனர். 4-ம் இடத்தில் அமமுக வேட்பாளர் முனுசாமி உள்ளார்.

முக்கிய குறிப்பு: 

இது தொகுதிவாரியான வாக்காளர்கள் அளித்துள்ள வாக்கு விகிதம் அல்ல. கட்சி அல்லது வேட்பாளர் மீது அபிமானம் கொண்டவர்கள் எங்கிருந்தாலும் இந்த வாக்களிப்பில் கலந்துகொள்ளலாம் என்பதால்,  குறிப்பிட்ட கட்சி அல்லது வேட்பாளருக்கு ஆதரவான/எதிப்பான இணையதள வாசகர்களின் மனநிலையையே இந்த வாக்களிப்பு காட்டுகிறது. அதை மனதில் கொண்டு இந்த முடிவுகளை அணுகும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

மற்ற தொகுதிகள் குறித்த விவரங்கள காண:

SCROLL FOR NEXT