கன்னியாகுமரி

கள நிலவரம்: கன்னியாகுமரி தொகுதி யாருக்கு?

செய்திப்பிரிவு

கன்னியாகுமரியில் எப்போதுமே தேசியக் கட்சியின் ஆதிக்கம்தான். ஒன்று பாஜக அல்லது காங்கிரஸ் அரிதாக கம்யூனிஸ்ட் என ஆதிக்கம் கொண்ட மண் இது. இந்த முறை பாஜக சார்பில் சிட்டிங் எம்.பி. பொன்.ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் சார்பில் எச்.வசந்தகுமார் என களமிறக்கப்பட்டுள்ளனர். களத்தில் 15 சுயேட்சைகள் இருந்தாலும்கூட போட்டி பொன். ராதாகிருஷ்ணனுக்கும் எச்.வசந்தகுமாருக்கும்தான்.

பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அவர் தொகுதியில் மேற்கொண்ட மேம்பாலப் பணிகள் வாக்காளர்களைச் சேர்த்துள்ளன. அவர் சத்தமில்லாமல் தொகுதிக்கு நிறைய நலத்திட்டங்களை செய்திருப்பதாக மக்கள் கருதுகின்றனர். வர்த்தக துறைமுகத்துக்கான ஆதரவு வாக்குகளை பொன்னார் குறிவைத்திருக்கிறார்.

தொகுதியில் 14 லட்சத்து 70 ஆயிரம் வாக்குகள் உள்ளன. இவற்றில் மீனவ சமுதாய வாக்குகள் 1 லட்சத்து 30 ஆயிரம். மீனவர்கள் வாக்குகள் பொன்.ராதாகிருஷ்ணனுக்குக் கிடைக்க வாய்ப்பே இல்லை. ஆனால் இந்துக்கள் வாக்குகள், நாடார் வாக்குகள் பொன்னாருக்கே என்கிறது கள நிலவரம்.

பாஜகவுக்கு தமிழகத்தில் எம்.எல்.ஏ., கணக்கையும் எம்.பி.கணக்கையும் தொடங்கிவைத்ததே கன்னியாகுமரிதான். ஆர்.எஸ்.எஸ். பலம் கொண்ட பகுதி இது. அதனால் அவர்கள் களத்தில் இறங்கி வேலை செய்து கொண்டிருக்கின்றனர்.

அதேவேளையில் எச்.வசந்தகுமார் நாடார். அவருக்கும் சொந்த ஊர் கன்னியாகுமரியின் அகஸ்தீஸ்வரம் என்பதால் இந்து நாடார் வாக்குகளை அவரும் குறிவைத்திருக்கிறார். இங்கு சிறுபான்மையினர் 50% உள்ளனர். அதனால் சிறுபான்மையினர் மோடி எதிர்ப்பு மனநிலையில் இருப்பதால் அவை வசந்தகுமாருக்கு சாதகமாகலாம் எனக் கூறப்படுகிறது.

இதற்கு முந்தைய நாடாளுமன்றத் தேர்தல்களில் எல்லாம் கன்னியாகுமர் காங்கிரஸுக்கா பாஜகவுக்கா என்று எளிதில் கணித்துவிட முடியும். ஆனால் இந்த முறை மட்டும் யாருக்கு என்று கணிக்க முடியாத சூழல் நிலவுவதே கன்னியாகுமரி மீது இரண்டு கட்சிகளின் கவனத்தையும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

இதை உணர்ந்ததாலோ என்னவோ வேட்பாளர் அறிவிப்புக்கு முன்னதாகவே ராகுலும் மோடியும் தொகுதியில் பிரச்சாரத்தை முடித்துவிட்டனர்.

தொகுதி குறித்த கருத்துக் கணிப்பு

கன்னியாகுமரி தொகுதியில் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கும் காங்கிரஸ் வேட்பாளர் ஹெச்.வசந்தகுமாருக்கும் இடையே பலமான போட்டி உள்ளது. இதில் வசந்தகுமாரை முந்தி  பொன்.ராதாகிருஷ்ணன் முதலிடத்தில் உள்ளார். இரண்டாம் இடத்தில் வசந்தகுமார் உள்ளார். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜெயன்றீன் 3-ம் இடத்தில் உள்ளார்.

முக்கிய குறிப்பு: 

இது தொகுதிவாரியான வாக்காளர்கள் அளித்துள்ள வாக்கு விகிதம் அல்ல. கட்சி அல்லது வேட்பாளர் மீது அபிமானம் கொண்டவர்கள் எங்கிருந்தாலும் இந்த வாக்களிப்பில் கலந்துகொள்ளலாம் என்பதால்,  குறிப்பிட்ட கட்சி அல்லது வேட்பாளருக்கு ஆதரவான/எதிப்பான இணையதள வாசகர்களின் மனநிலையையே இந்த வாக்களிப்பு காட்டுகிறது. அதை மனதில் கொண்டு இந்த முடிவுகளை அணுகும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

மற்ற தொகுதிகள் குறித்த விவரங்கள காண:

SCROLL FOR NEXT