| மனித குலம் தொடர்ந்து தடையில்லாமல் இயங்கக் காரணம் மகப்பேறு. அதில் ஏற்படும் பிரச்சினைகள், அதற்கான தீர்வுகள், கர்ப்ப காலம், பிரசவ ஆலோசனைகள், குழந்தை வளர்ப்பு குறித்து முழுமையாக அலச முயற்சிக்கும் தொடர் |
''கவிதா அக்காவுக்கு களையான முகம், சிரிக்கும் கண்கள். திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியும் குழந்தை பிறக்காததால், கணவர் விவாகரத்து செய்துவிட்டார். இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் கவிதாக்கா. 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும் குழந்தை இல்லை. சரியான மருத்துவமனைக்குச் சென்று உரிய சிகிச்சை பெற்ற அவருக்குக் கரு உண்டானது. ஆனால் 2 மாதங்களில் கரு கலைந்துவிட்டது. ஆனாலும் அத்தனை சந்தோஷப்பட்டார் கவிதா.
என்ன இப்படி இருக்கிறார் என்று யோசிக்கிறீர்களா? நானும் அப்படித்தான் நினைத்தேன். ஆனால் அவர் சொன்ன பதிலில் அதிர்ந்து போனேன். ''என்னைய இத்தன நாளா குழந்தை பெக்க வக்கில்லாதவன்னு எல்லோரும் பேசினாங்க; உயிரா நினைச்ச கணவர்கூட டைவர்ஸ் பண்ணார்; ஆன இன்னிக்கு நான் மலடி இல்ல; என்னாலயும் குழந்தைய சுமக்க முடியும்னு எல்லோருக்கும் நிரூபிச்சுட்டேன்'' என்று அழுத கணம் இன்னும் கண்ணுக்குள்ளேயே உறைந்து கிடக்கிறது'' தெரிந்த மருத்துவர் ஒருவர் இதைப் பகிர்ந்துகொண்டார்.
காலம் காலமாக நாம் பயன்படுதும் மலடி என்ற சொற்பிரயோகம் எத்தனை கொடூரமானது? குழந்தை பிறக்காததற்கு ஆண், பெண் என இரண்டு தரப்பும் காரணமாக இருக்கக்கூடும். ஆனால் சமூகமோ பெண்களையே குறிவைத்துத் தாக்குகிறது. இந்நிலை தற்போது சற்றே மாறியிருந்தாலும் மலடி என்ற சொல் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை நம் வீட்டுப் பெரியவர்களைக் கேட்டால் சொல்வார்கள்.
வளரும் நாடுகளில் நான்கு தம்பதிகளில் ஒருவர் குழந்தைப்பேறு இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார மையம் கூறுகிறது. உலகம் முழுவதும் சவாலாகவே உருவெடுத்துள்ள குழந்தை இன்மையால், 8 முதல் 12 சதவீத தம்பதிகள் அவதிப்படுகின்றனர்.
திருமணமாகி ஓரிரு ஆண்டுகளுக்கு குழந்தை பற்றிப் பெரும்பாலானோர் யோசிப்பது இல்லை. அதற்குப் பிறகும் குழந்தை உண்டாகவில்லை என்ற சூழ்நிலையில், தம்பதியர் மருத்துவமனைக்குச் செல்கின்றனர். பெரும்பாலான மருத்துவமனைகளும் கருத்தரிப்பு மையங்களும் பணத்தையே பிரதானமாகப் பார்க்கின்றன. இந்நிலையில், குழந்தையின்மையை மருந்து மாத்திரைகள் இல்லாமலே சரிசெய்ய முடியுமா? என்பது குறித்து அரசு மகப்பேறு மருத்துவர் அனுரத்னாவிடம் பேசினேன்.
குழந்தைப் பேறு இல்லாததற்கு 5 விஷயங்கள் முக்கியக் காரணமாக அமைகின்றன.
1. உடற்பருமன் (Obesity)
2. ஹார்மோன் சமநிலை இல்லாமை (Harmone Imbalance)
3. தொற்று (Infection)
4. அழுத்தம் மிகுந்த வாழ்க்கை முறை (Stressful Life)
5. உடல் இயக்கம் இல்லாதது (No Physical Activites)
தனித்தனிக் காரணங்கள் என்றாலும் தொற்று தவிர மற்ற அனைத்துமே ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டவை. ஹார்மோன் கோளாறால் உடல் எடை கூடும். போதுமான உடல் இயக்கம் இல்லாமலும், மன அழுத்தம் ஏற்பட்டாலும் ஹார்மோன் சுரப்பில் மாறுபாடு ஏற்படும். அதனால் எல்லாவற்றையும் சரியாக சமநிலையில் வைத்திருக்க வேண்டியது அவசியம்.
உடல் எடை கூடுவது எப்படி?
உடற்பருமன் ஏற்பட முக்கியக் காரணம் உணவுமுறை. நிறைய சாப்பிட்டால் குண்டாகி விடுவோம் என்பது தவறான எண்ணம். காலை உணவைத் தவிர்ப்பது, கிடைத்ததையெல்லாம் அள்ளிச் சாப்பிட்டுவிட்டு ஓடுவது, மெட்டபாலிச மாற்றம் ஆகியவற்றால்தான் உடல் எடை கூடுகிறது. மரபியல் ரீதியாகவே உடல் பருமனாக இருப்பவர்களுக்கு குழந்தையின்மைப் பிரச்சினை அரிதாகவே ஏற்படுகிறது.
இப்போதைய வாழ்க்கை முறையில் சட்னி அரைக்க மிக்ஸி, மாவு ஆட்ட கிரைண்டர், துவைக்க வாஷிங் மெஷின், கடைக்குச் செல்ல வண்டி என நம் உடலுக்குப் பெரிதாக எந்த வேலையையும் கொடுப்பதில்லை. நம் உடல் உறுப்புகள் ஃபிட் ஆக இருந்தால்தான் கருப்பையும் ஃபிட்டாக இருக்கும்.
இன்றைய உணவுப்பொருட்கள் மூலம் பெண்களுக்கு நுண் ஊட்டச்சத்துகள் (micro nutrients) கிடைப்பதில்லை. குறிப்பாக கருப்பைக்குத் தேவையான துத்தநாகம், கால்சியம் ஆகியவை போதுமான அளவு கிரகிக்கப்படுவதில்லை. இதனாலும் குழந்தைப் பிறப்பு தள்ளிப்போகிறது என்பதை நம்புகிறீர்களா?
இதற்கு மாத்திரைகளை அளித்து சரிசெய்கிறோம் என்கிறார் மருத்துவர் அனுரத்னா.
உணவு முறையில் இதைச் சரிசெய்ய முடியாதா என்று கேட்டால், செய்யலாம் அதற்கு, பதப்படுத்தப்படாத உணவுகள், ஃப்ரெஷ் காய்கறிகள் ஆகியவற்றை மட்டுமே உண்ண வேண்டும். உதாரணத்துக்கு திங்கட்கிழமை வாங்கும் காய்கறியை ஃப்ரிட்ஜில் வைத்து ஞாயிற்றுக்கிழமை அன்று எடுத்து சமைக்கும்போது அதில் நுண் ஊட்டச்சத்துகளே இருக்காது. அதனால் கூடுமானவரை வெளியில் வைத்தே காய்கறிகளைப் பயன்படுத்துவது நல்லது.
ஹார்மோன் சமநிலையில் பிரச்சினை (Harmone Imbalance)
இதனால் ஏற்படும் முக்கியப் பிரச்சினை பிசிஓடி (PCOD). கருப்பையில் ஏற்படும் குமிழ் மாதிரியான நீர்க்கட்டிகளே பிசிஓடி என்று கூறப்படுகின்றன. முகத்தில் வரும் முகப்பரு போல, இதைச் சரிசெய்த பிறகு மீண்டும் வரலாம். எனினும் இதற்கு அறுவை சிகிச்சை தேவையில்லை. நடைப்பயிற்சி, முறையான உணவு மூலம் இதைச் சரிசெய்யலாம். முடியாத பட்சத்தில் மாத்திரைகள் மூலம் சரியாக்கலாம்.
தொற்று (Infection)
தொற்றுப் பிரச்சினை பெரும்பாலும் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்குதான் அதிகம் ஏற்படுகிறது. அவர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுவதால், நோய்த்தொற்று அதிகமாக ஏற்படுகிறது. அதிக வெள்ளைப்படுதல், அரிப்பு, இடுப்பு வலி, அடிவயிறு வலிப்பது ஆகியவை இதன் அறிகுறிகள். சமயத்தில் இதனால் சிறுநீர்த்தொற்று ஏற்படவும் வாய்ப்புண்டு.
இதனால் கருக்குழாயில் தொற்று ஏற்பட்டு விந்தணு உள்ளே செல்லும்போதே இறந்துவிடுகிறது. நன்றாகத் தேய்த்துக் குளிப்பது, பிறப்புறுப்பைச் சுத்தமாக வைத்துக்கொள்வது ஆகியவை இதற்கான தீர்வுகள். தொற்று ஆரம்பகட்டத்தில் இருந்தால் சுத்தமாக இருப்பதன் மூலமே சரிசெய்யலாம். தொற்று அதிகமாக இருக்கும்போது மாத்திரைகள் உட்கொள்வது அவசியம்.
மன அழுத்தம் (Stress)
அழுத்தம் இன்றைய காலகட்டத்தில் முக்கியப் பிரச்சினையாக மாறிவிட்டது. இதுதான் என் வேலை என்று என்ஜாய் பண்ணி செய்யப் பழகிக்கொள்ள வேண்டும். இந்த வேலையை நான் ஏன் செய்யவேண்டும் என்று யோசித்தால் அதுதான் அழுத்தமாக மாறுகிறது.
குடும்பம் என்று வரும்போது சமநிலையைக் கையாள வேண்டும். போட்டி போடுவதை அறவே தவிருங்கள். 'எனக்கு என் உறவுகள் முக்கியம் என்பதைப் போல எதிர்த்தரப்பினருக்கு அவரின் உறவுகள் முக்கியம்' என்பதை உணரவேண்டும். மிகமிக முக்கியமான ஒன்று, ஒப்பிட்டுப் பார்ப்பது. 'ஃப்ரண்ட் வீட்டில் அப்படி செலவு செய்கிறார்கள்; வெளியே செல்கிறார்கள்' என்று நம்முடன் கம்பேர் செய்வது தவறு. நம்முடைய பொருளாதார சூழலுக்கேற்ற வகையில் வாழ்ந்தாலே போதும், பிரச்சினைகள் இருக்காது'' என்கிறார் மருத்துவர் அனுரத்னா.
ஆய்வு காட்டும் உண்மைகள்
25 முதல் 29 வயதுக்கு உட்பட்ட 16% பெண்களுக்குக் குழந்தை இல்லை. அதுவே 20 முதல் 24 வயதுக்குட்பட்ட 35 சதவீதப் பெண்களுக்குக் குழந்தை பிறப்பதில்லை என்று 2011-ல் எடுக்கப்பட்ட தேசிய குடும்ப சுகாதார ஆய்வு கூறுகிறது. இப்போது இந்த விகிதாச்சாரம் இன்னும் அதிகரித்து இருக்கக்கூடும்.
குறிப்பாக கிராமப் புறங்களைக் காட்டிலும் நகர்ப்புறங்களில் வாழும் பெண்களுக்கு மகப்பேறு குறைவாக இருக்கிறது. முஸ்லிம் பெண்களுக்கு குழந்தை பிறப்பதில் பிரச்சினைகள் மிகவும் குறைவு. அதே நேரத்தில் பழங்குடியினப் பெண்களிடையே குழந்தை இன்மை விகிதம் அதிகமாக இருக்கிறது.
*
கருத்தரிப்பில் பொதுவான பிரச்சினைகள் என்றால் மேற்கூறிய முறைகளிலேயே அவற்றைச் சரியாக்கமுடியும். ஆனால் சில சிக்கலான தருணங்களில் பெண்களுக்கு ஐவிஎஃப் In Vitro Fertilization (IVF), ஐயூஐ Intra Uterine Insemination (IUI) உள்ளிட்ட அதிநவீன சிகிச்சைகள் தேவை. ஐவிஎஃப்,ஐயூஐ என்றால் என்ன? அவற்றுக்கு அதிக செலவாகுமா? அதன்மூலம் 100% குழந்தை உண்டாகுமா?
கருத்தரித்தலில் ஆண்களுக்கும் பிரச்சினைகள் ஏற்படுமே, அவை என்னென்ன? அவற்றை எப்படிச் சரிசெய்வது?
- அடுத்த அத்தியாயத்தில் மகப்பேறு அறிவோம்
க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@thehindutamil.co.in