மற்றவை

ராமநாதபுரத்தில் சுயேட்சையாகப் போட்டியிடும் இந்திய லங்கடி விளையாட்டு அணியின் கேப்டன்  தேவசித்தம்

செய்திப்பிரிவு

மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரத்தில் சுயேட்சையாகப் போட்டியிட இந்திய லங்கடி விளையாட்டு அணியின் கேப்டன்  தேவசித்தம் இன்று வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தேவேந்திர நகரைச் சேர்ந்தவர் தேவசித்தம் (30).  தமிழகத்தின் பராம்பரிய விளையாட்டான (நொண்டியாட்டம்) லங்கடி அணியின் இந்திய அணி கேப்டன். இவரது தலைமையில் இந்திய அணி 2014-ல் பூடானில் நடந்த தெற்கு ஆசியக் கோப்பை, 2015-ல் நேபாளத்தில் நடந்த ஆசியக் கோப்பை, 2017 சிங்கப்பூரில் நடந்த உலகக்கோப்பையை வென்றது. இவற்றில் பல முறை சிறந்த ஆட்டக்காரர் விருதை தேவசித்தம் பெற்றுள்ளார்.

இந்திய அணிக்காக விளையாடினால் அந்த வீரருக்கு மாநில அரசு முதல் தர அந்தஸ்துடன் அரசுப் பதவியும் வழங்குவது வழக்கம். மறைந்த முதல்வர் ஜெயலலிதா தேவசித்தத்திற்கு அரசு வேலை வழங்குவதாகத் தெரிவித்திருந்தார். ஆனால் அவர் மறைந்து இரண்டாண்டுகள் ஆகியும் தேவசித்தத்திற்கு அரசுப் பணி கிடைக்கவில்லை.

இதனால் தேவசித்தம் குடும்பத் தொழிலான விவசாயத்தைத் தொடர்ந்து செய்து வருகிறார். மேலும் லங்கடி விளையாட்டு வரும் தலைமுறையினருக்குச் சென்றடைய வேண்டும் என்பதற்காகப் பயிற்சி மையம் ஒன்றைத் தொடங்கி ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிச் சிறுவர்களுக்கும், இளைஞர்களுக்கும் பயிற்சி அளித்து வருகிறார் தேவசித்தம்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரத்தில் சுயேட்சையாகத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் கொ.வீரராகவராவிடம் நேற்று (செவ்வாய்க்கிழமை) வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

இது குறித்து தேவசித்தம் செய்தியாளரிடம் கூறியதாவது:

''மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் ஐயாவை நான் சந்தித்தபோது ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு வழிகாட்டியாக நான் திகழ வேண்டும் என்று என்னை கேட்டுக் கொண்டார். அதிலிருந்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு லங்கடி விளையாட்டைப் பயிற்சி அளித்து வருகின்றேன்.

கடந்த 10 ஆண்டுகளாக லங்கடி விளையாட்டை ஊக்குவிக்க பல்வேறு அரசியல்வாதிகளைச் சந்தித்து முறையிட்டும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் என்னை சில அரசியல்வாதிகள் அணுகி தங்கள் கட்சிகளில் சேருவதற்கு கோரிக்கை வைத்தனர். நான் மறுத்து விட்டேன். இதனால் தேர்தலில் நிற்க முடிவெடுத்தேன்.

நான் சுயேட்சையாக நிற்பதால் எந்த ஒரு தலைவரின் உத்தரவுக்காகவும் காத்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. நான் ஜெயித்தால் பின்தங்கியுள்ள ராமநாதபுரம் மாவட்டத்தை முன்னேற்றவும்,  தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டுகளை ஊக்கப்படுத்தவும் நடவடிக்கை எடுப்பேன்''.

இவ்வாறு தேவசித்தம் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT