மற்றவை

இதுதான் இந்தத் தொகுதி: கடலூர்

க.ரமேஷ்

கடலூர் மக்களவைத் தொகுதி கடலூர், குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, திட்டக்குடி(தனி), பண்ருட்டி, விருத்தாசலம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியதாகும். சோழர், பல்லவர், முகலாயர், ஆங்கிலேயர் ஆகியோரால் ஆட்சி செய்யப்பட்டது. கடலூர் புனித டேவிட் கோட்டையிலிருந்து இந்தியாவின் தென் பிராந்தியத்தை ஆங்கிலேயர்கள் ஆண்டுவந்துள்ளனர். வணிகத் தொடர்புகளுக்கும் கடலூர் துறைமுகத்தை அதிக அளவில் பயன்படுத்தியுள்ளனர். பாடலீஸ்வரர் கோவில், திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில், விருத்தகிரீஸ்வரர் கோவில், சத்தியஞான சபை, வீரட்டானேஸ்வர் கோவில், சரநாராயணபொருமாள் கோவில், வைத்தியநாதசுவாமி கோவில் ஆகிய ஆன்மிகத் தலங்கள் உள்ளனர். பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ள தொகுதி.

பொருளாதாரத்தின் திசை: இத்தொகுதியில் விவசாயமே பிரதானம். விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் அதிகம் உள்ள தொகுதி. நெல், கரும்பு, முந்திரி, பலா பருத்தி, மிளகாய் ஆகிய பயிர்கள் அதிக அளவில் விளைவிக்கப்படுகின்றன. கடலூர் சிப்காட், விருத்தாசலம் பீங்கான் தொழிற்சாலை, தனியார் சர்க்கரை ஆலைகள், முந்திரி ஏற்றுமதி, பலா விற்பனை ஆகியவை இந்தத் தொகுதியின் பொருளாதாரத்தை நிர்ணயம் செய்கின்றன. பூமியில் சுரங்கம் அமைத்து நிலக்கரி எடுக்கும் பொதுத் துறை நிறுவனமான என்எல்சி இந்தியா நிறுவனம், இந்தத் தொகுதியில்தான் உள்ளது.

தீர்மானிக்கும் பிரச்சினைகள்: திட்டக்குடி தொகுதியில் வெலிங்டன் நீர்த்தேக்கம் தூர்வாரப்படாததாலும், நீர் வரத்துக்கான முறையான ஏற்பாடுகள் செய்யப்படாததால் விருத்தாசலம், திட்டக்குடி பகுதி விவசாயிகள் கடும் பாதிப்பை எதிர்கொள்கின்றனர். திட்டக்குடி தொகுதியில் வேலைவாய்ப்பை உருவாக்கும் அளவுக்குத் தொழிற்சாலைகளும் இல்லை. கரும்பு விவசாயிகளுக்குத் தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகங்கள் தர வேண்டிய நிலுவைத் தொகையைப் பெற்றுத்தர நடவடிக்கை இல்லை. விருத்தாசலத்தில் செராமிக் தொழில் வளர்ச்சி முடங்கிக் கிடக்கிறது; மூடப்பட்ட சூரியகாந்தி எண்ணெய் பிழியும் ஆலை திறக்கப்படும் அறிகுறியே இல்லை. குறிஞ்சிப்பாடி பகுதியில் விவசாயத்தை மேம்படுத்திட சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. கடலூரில் புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் உள்ளனர். இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை அரசு உணர்ந்ததாகவே தெரியவில்லை. அரசு மருத்துவக் கல்லூரித் திட்டம் எப்போது தொடங்கப்படும் என்று கேட்கிறார்கள் கடலூர்வாசிகள்.

நீண்டகாலக் கோரிக்கைகள்: கடலூர்- புதுச்சேரி ரயில் பாதை கடந்த 15 ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளது. கடலூரில் மாற்று புறவழிச்சாலை அறிவிக்கப்பட்டாலும் பணிகள் தொடங்கியபாடில்லை. மத்திய அரசின் அம்ரூத் திட்டத்தில் கடலூர் கம்மியம்பேட்டை குப்பைக் கிடங்கு அகற்றப்படவில்லை. திருவந்திபுரத்தைச் சுற்றுலா தலமாக ஆக்க நடவடிக்கை எடுக்கவில்லை. தொன்மை நகரமான கடலூரின் வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்கக் கோரும் மக்களின் குரல்கள் கண்டுகொள்ளப்படவில்லை. கடலூர் துறைமுகம் விரிவாக்கம் செய்யப்படவில்லை. திறன் மேம்பாட்டுக்கான மத்திய அரசின் திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்கும் நடவடிக்கைகள் இல்லை. பணி நிரந்தரம் கோரிப் போராட்டம் நடத்திவரும் என்எல்சி இந்திய நிறுவன ஒப்பந்தத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் இன்றுவரை தீர்க்கப்படவில்லை. என்எல்சி நிறுவனத்துக்கு நிலம், வீடு கொடுத்தவர்களுக்கு இன்னமும் உரிய இழப்பீடு, வேலைவாய்ப்புகள் வழங்கப்படவில்லை.

ஒரு சுவாரஸ்யம்: நிறைய சுவாரஸ்யங்கள் கொண்ட தொகுதி. கடலூர் மேடையில்தான்  ஜெயலலிதாவை எம்ஜிஆர் அறிமுகப்படுத்தினார். இங்கிருந்துதான் ஜெயலலிதாவின் அரசியல் பிரவேசம் தொடங்கியது. கடந்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் தொகுதியில் திமுக போட்டியிடுகிறது. 2009 மக்களவைத் தேர்தலில் சம்பத் அதிமுக வேட்பாளராகவும்,  அவரை  எதிர்த்து அவரது அண்ணன் தாமோதரன் தேமுதிக வேட்பாளராகவும் போட்டியிட்டனர்.  தற்போது, அதிமுகவில் இருக்கிறார் தாமோதரன்.

வெற்றியைத் தீர்மானிக்கும் சமூகங்கள்: வன்னிய சமூகத்தினர், பட்டியலின சமூகத் தினர் சம அளவில் உள்ளனர். செட்டியார், பிள்ளை, முதலியார், யாதவ சமூகத்தினருக்குக் கணிசமான அளவில் வாக்குகள் உள்ளன. அதிமுக, திமுக சம பலத்தில் உள்ளன. பாமக, விசிக ஆகிய கட்சிகளுக்கு வெற்றியை நிர்ணயம் செய்யும் அளவுக்கு வாக்குகள் உள்ளன. தேமுதிக, காங்கிரஸ் கட்சிகளுக்கு ஓரளவு வாக்குகள் உண்டு.

அதிக வெற்றியை ருசித்தவர்கள்: இந்தத் தொகுதி, ஒருகாலத்தில் காங்கிரஸின் கோட்டை. இதுவரை நடந்த 14 மக்களவைத் தேர்தல்களில் ஏழு முறை காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. திமுகவுக்கு இந்தத் தொகுதியில் நான்கு முறை வெற்றி கிடைத்துள்ளது. அதிமுகவைப் பொறுத்தவரை ஒரே முறை இங்கு வென்றிருக்கிறது. கடந்த 2014-ல் நடந்த தேர்தலில் அதிமுகவின் அருண்மொழிதேவன் வெற்றி பெற்றார்.

மக்கள்தொகை எப்படி?

மொத்தம் 17,44,521

ஆண்கள் 8,78,192

பெண்கள் 8,66,329

வாக்காளர்கள் யார்?

மொத்தம் 13,42,320

ஆண்கள் 6,64,313

பெண்கள் 6,77,928

மூன்றாம் பாலினத்தவர்கள்: 79

சமூகங்கள் என்னென்ன?

இந்துக்கள்: 89.12%

முஸ்லிம்கள்: 6.09%

கிறிஸ்தவர்கள்: 3.98%

எழுத்தறிவு எப்படி?

ஆண்கள் 85.94%

பெண்கள் 70.14%

SCROLL FOR NEXT