மழை வெள்ளத்தில் மக்கள் பாதிக் கப்பட்டபோது மீட்புப் பணிகளை அதிமுக அரசு சிறப்பாக செய்தது என்று முதல்வர் பழனிசாமி தெரி வித்தார்.
தென் சென்னை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெ.ஜெயவர்தனை ஆதரித்து கந்தன்சாவடி, சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களில் முதல்வர் பழனி சாமி நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
மக்களவையில் நமது குரல் சிறப்பாக ஒலிக்கும். திமுக ஆட்சியில், தமிழக மக்களுக்கு எந்த திட்டங்களும் செயல்படுத்தவில்லை. அதிகாரம் தான் அவர்கள் கண்ணுக்கு தெரிந்ததே தவிர, மக்களின் கஷ்டம் தெரியவில்லை. ஆனால், அதிமுக அரசு கிடைத்த உரிமையை முறையாக பயன்படுத்தியது. சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு என்ற தனி பிரிவை ஏற்படுத்தியது அதிமுக அரசுதான். கோயில் சிலைகளை பாதுகாக்க தேவையான இடங்களில் அறைகள் கட்டப்பட்டு வருகின்றன. ஹோட்டலில் சாப்பிட்ட உணவுக்கு பணம் கொடுக்காமல் தகராறில் ஈடுபட்டது யார் என அனைவருக்கும் தெரியும். எதிர்க்கட்சியாக உள்ளபோதே இவ்வளவு அராஜகம் செய்கிறார்கள். ஆளுங்கட்சியாக இருந்தால் என்னென்ன செய்வார்கள் என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாட்டில் உள்ள மக்களை பாதுகாக்க மீண்டும் மோடி ஆட்சிக்கு வர வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பாமக வேட்பாளர் வைத்தியலிங்கத்தை ஆதரித்து தாம்பரம், பல்லாவரம், ஆலந்தூர், மதுரவாயல், அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் முதல்வர் பழனிசாமி பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
அதிமுக கூட்டணி எப்போதும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் கூட்டணி. திமுக கூட்டணி, வெறும் வாக்குறுதிகளை மட்டுமே அறிவிக்கும். அவற்றை நிறைவேற்றாது. திமுக ஆட்சியில் தமிழகத்தில் மின்வெட்டு இருந்தது. 2011-ல் அதிமுக ஆட்சிக்கு வந்தபின், மூன்றே ஆண்டுகளில் மின்வெட்டு தடுக்கப்பட்டது. தற்போது மின்மிகை மாநிலமாக தமிழகம் உருவெடுத்துள்ளது. அதிக மின் உற்பத்திக்காக தமிழகம் மத்திய அரசிடம் விருது பெற்றது.
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு மிக சிறப்பாக உள்ளது. பெண்களுக்கு இருசக்கர வாகனம் கொடுக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவித்தோம். அதன்படி, பணிக்கு செல்லும் பெண்களுக்கு இருசக்கர வாகனம் வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்தவுடன் ஏழைத் தொழிலாளர் களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2,000 வழங்கப்படும். மழை வெள்ளத்தில் மக்கள் பாதிக்கப்பட்ட போது மீட்புப் பணிகளை அதிமுக அரசு சிறப்பாக செய்தது. திமுக வினர் பணத்துக்காக எதையும் செய்வார்கள். அராஜகம் செய்வது தான் அவர்களின் சாதனையாக உள்ளது. இவ்வாறு முதல்வர் பேசினார்.