மற்றவை

வேட்பாளர் படிவத்தில் ஓபிஎஸ்- ஈபிஎஸ் கையெழுத்திட தடைகோரும் மனு: டெல்லி உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணை

செய்திப்பிரிவு

அதிமுக வேட்பாளர் படிவத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் - இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் கையெழுத்திட்டால் செல்லாது அதற்கு தடை விதிக்கவேண்டும் என  முன்னாள் அதிமுக எம்.பி. கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.

அதிமுகவில் தலைவர் தொண்டர்களால் தேர்வு செய்யப்படவேண்டும். பைலா விதிகளை திருத்தி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது. அது விதிகளுக்கு முரணானது என கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருக்கிறது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை- ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் வேட்பு மனுவில் (formA&B) வேட்பாளர்களை அங்கீகரித்தும், உறுதி செய்தும் கையெழுத்திடுவதற்கு தடை விதிக்கக்கோரி அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிச்சாமி தொடர்ந்த வழக்கை நாளை விசாரிப்பதாக டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றம், 18 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அங்கீகார கடிதம் மற்றும் சின்னம் ஒதுக்கக் கோரும் கடிதத்தில் பொதுச்செயலாளர் கையெழுத்திட வேண்டும். ஆனால் பொதுச் செயலாளர் என்ற பதவி இல்லாத நிலையில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது.

இவர்கள் கையெழுத்திட்டால் அது செல்லாது என கே.சி.பழனிச்சாமி தரப்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், தேர்தல் ஆணையம் மார்ச் 28-ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

ஆனால் தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்ய மார்ச்-26-ம் தேதி கடைசி நாள் என்பதால் வழக்கை அதற்கு முன்னதாக விசாரித்து உத்தரவு பிறப்பிக்க கே.சி.பழனிச்சாமி தரப்பில் கோரப்பட்டது.

ஆனால், முதலில் இந்தக் கோரிக்கையை ஏற்க டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யோகேஷ் கன்னா மறுப்பு தெரிவித்தார். ஆனால் மீண்டும் கே.சி.பழனிச்சாமி தரப்பில் நீதிபதி முன்பே முறையிடப்பட்டது. குறிப்பாக பொதுச்செயலாளருக்கு மட்டுமே உள்ள அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தக்க கூடாது என்பதற்காகவே இந்த வழக்கு தொடரப்பட்டது என்றும், மேலும் வழக்கை மார்ச்28-ல் விசாரித்தால் மனுவின் நோக்கமே நீர்த்துவிடும் எனவே வழக்கை மார்ச் 20-ம் தேதிக்கு முன்பாக விசாரிக்க வேண்டும் என நேரில் முறையிடப்பட்டது.

இதனையடுத்து வழக்கை மார்ச் 19-ம் தேதி (நாளை)விசாரிக்க டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யோகேஷ் கன்னா ஒப்புதல் அளித்தார்.நாளை விசாரணைக்கு எடுக்கும் பட்சத்தில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்படும்.

கடந்த மாதம் நீதிபதி சிக்சானி அமர்வு இரட்டை இலை வழக்கில் சசிகலா பொதுக்குழுவால் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டது தவறு. அதேபோன்று தற்போதுள்ளவர்கள் விதிகளைத் திருத்தி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளராகத் தேர்வு செய்யப்பட்டது தவறு என குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தத் தீர்ப்பின் அடிப்படையில் இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது என கே.சி. பழனிச்சாமி தரப்பு தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT