மற்றவை

முன்வைப்புத் தொகையில் 500 ரூபாய் குறைந்ததால் வேட்புமனு தாக்கல் செய்யாமல் திரும்பிச் சென்ற சுயேட்சை வேட்பாளர்

எஸ்.நீலவண்ணன்

விழுப்புரத்தில் முன்வைப்புத் தொகையில் ரூ.500 குறைந்ததால் வேட்புமனு தாக்கல் செய்யாமல் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் திரும்பிச் சென்றார்.

தமிழகமெங்கும் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி கடந்த 19-ம் தேதி முதல் வேட்புமனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.

விழுப்புரம் (தனி) தொகுதிக்கு கடந்த 2 நாட்களாக எந்த ஒரு வேட்பாளரும் மனு தாக்கல் செய்யாத நிலையில், உளுந்தூர்பேட்டை அருகே பாண்டூர் கிராமத்தைச் சேர்ந்த கேசவன் மகன் அரசன் என்பவர் சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்ய இன்று (வியாழக்கிழமை) முற்பகல் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் வந்தார்.

வேட்புமனுவுடன் முன்வைப்புத் தொகை ரூ.12,500 செலுத்துவதற்காக பணத்தை எடுத்து எண்ணிய அரசன், அதில் ரூ.500 குறைவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே தன் மொபைலில் மனைவி ராஜாம்பாளை தொடர்புகொண்டு கேட்டபோது, பங்குனி உத்திர செலவுக்காக ரூ.500 பணம் எடுத்ததைச் சொல்லியுள்ளார்.

இதையடுத்து யாரிடமாவது ரூ.500 பெற்றுக்கொண்டு மீண்டும் வருவதாக செய்தியாளர்களிடம் சொல்லிவிட்டு புறப்பட்டுச் சென்றார். அவருடன் வழி மொழியவும், முன் மொழியவும் உடன் யாரும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் விழுப்புரம் (தனி) தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு 811 வாக்குகளை அரசன் பெற்றுள்ளார் என்பதுதான் இதில் ஹைலைட்.

SCROLL FOR NEXT