காங்கிரஸுக்கு பிஹாரில் பாஜகவின் இரண்டு அதிருப்தி எம்.பி.க்கள் தலைவலியாகி விட்டனர். நடிகர் சத்ருகன் சின்ஹா மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரராக கீர்த்தி ஆசாத் ஆகியோருக்கு தொகுதி ஒதுக்குவது காங்கிரஸின் சவாலாகி விட்டது.
பிஹாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் லாலு பிரசாத் யாதவ் தலைமையில் அமைந்த மெகா கூட்டணியில் காங்கிரஸ் முக்கிய உறுப்பினராக உள்ளது. மொத்தம் உள்ள 40-ல் ஆர்ஜேடி 20 மற்றும் காங்கிரஸுக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எனினும், இவை எந்தத் தொகுதிகள் என்பது முடிவாகவில்லை. பிஹாரின் பாட்னா சாஹேப், தர்பங்கா, மதேபுரா மற்றும் சுபோல் ஆகியவற்றைப் பெறுவதில் இரண்டு கட்சிகளுக்கு இடையே மோதல் நிலவுகிறது.
இதனிடையே, பாஜகவில் இரண்டாவது முறையாக பாட்னா சாஹேபில் வெற்றி பெற்ற சத்ருகன் சின்ஹா காங்கிரஸில் சேர விரும்புகிறார். இதற்கு பாட்னா சாஹேபிலேயே போட்டியிடவும் அவர் வலியுறுத்துகிறார். இவருக்கு முன்னதாக மற்றொரு பாஜக அதிருப்தியாளரான கீர்த்தி ஆசாத் பிப்ரவரி 19-ல் காங்கிரஸில் இணைந்து விட்டார். பிஹாரின் முன்னாள் முதல்வர் பகவத் ஜா ஆசாத்தின் மகனான கீர்த்தி, தர்பங்காவில் தொடர்ந்து மூன்றாவது முறை எம்.பி.யாக உள்ளார்.
டெல்லி கிரிக்கெட் சங்க விவகாரத்தில் கீர்த்தி, வெளிப்படையாக மத்திய நிதி அமைச்சரான அருண் ஜேட்லியை விமர்சனம் செய்திருந்தார். இதனால், பாஜகவில் இருந்து டிசம்பர் 23, 2015-ல் தற்காலிகமாக நீக்கப்பட்டிருந்தார்.
காங்கிரஸில் இணைந்த பின் தனது தர்பங்கா தொகுதியில் மீண்டும் போட்டியிட கீர்த்தி வற்புறுத்துகிறார். ஆனால், இந்த இரண்டு தொகுதிகளுமே கடந்த தேர்தலில் ஆர்ஜேடி வசம் இருந்தன. அதன் வேட்பாளர்கள் தொடர்ந்து இரண்டாவது இடத்தைப் பிடித்து வருகின்றன.
இதனால், பாட்னா சாஹேப் மற்றும் தர்பங்காவில் மீண்டும் தன் வேட்பாளர்கள் போட்டியிட்டால் எளிதாக வென்று விடலாம் என லாலு கருதுகிறார். ஆனால், அந்த இரண்டு தொகுதிகளையும் தமது வேட்பாளார்களுக்கு விட்டுத்தரும்படி காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.
இதனால், காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி இடையே கருத்துவேறுபாடுகள் எழுந்துள்ளன. இந்த மோதல் தேர்தலிலும் நிகழ்ந்து விடும் அச்சத்தால் காங்கிரஸுக்கு பெரிய தலைவலி உருவாகியுள்ளது.