தேர்தல் முறைகேடுகளில் முக்கியமாகப் பேசப்படுவது ‘வாக்குச் சாவடியைக் கைப்பற்றுதல்’. குறிப்பிட்ட கட்சியின் அல்லது வேட்பாளரின் ஆதரவாளர்கள் வாக்குச் சாவடியை முற்றுகையிட்டுத் தாங்களே ஓட்டு போடுவது, வாக்குப் பெட்டிகளைத் தூக்கிச்செல்வது என்று இதில் பல ரகங்கள் இருந்தன. இதற்கெல்லாம் தொடக்கப்புள்ளியாக அமைந்தது 1957 தேர்தலில், பிஹாரின் பேகுசராய் மாவட்டத்தின் ரச்சியாரி கிராமத்தில் நடந்த சம்பவம்தான் என்று அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். அந்தத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் சரயுக் பிரசாத் சிங் போட்டியிட்டார். கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக சந்திரசேகர் சிங் களமிறங்கினார். வாக்குப் பதிவின்போது ரச்சியாரி கிராமத்தின் கச்சாரி டோலா வாக்குச் சாவடியை சரயுக் பிரசாத் சிங்கின் ஆதரவாளர்கள் கைப்பற்றிக் கள்ள ஓட்டுக்கள் போட்டனர் என்று இந்தியத் தேர்தல் வரலாற்றில் பதிவாகிவிட்டது.
எனினும், அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று ரச்சியாரி கிராமத்தைச் சேர்ந்த முதியவர்கள் நினைவுகூர்கிறார்கள். அவர்கள் சொல்வது இதுதான்: ‘வாக்களிப்பதற்காக ரஜப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மாட்டு வண்டியில் வந்துகொண்டிருந்த தகவல் சரயுக் பிரசாத் சிங்கின் ஆதரவாளர்களுக்குக் கிடைத்தது. அவர்கள் சந்திரசேகர் சிங்கின் ஆதரவாளர்கள் என்பதை அறிந்ததும், குதிரைகளில் விரைந்து சென்ற காங்கிரஸ் தொண்டர்கள், திரும்பிச் செல்லுமாறு அவர்களை மிரட்டினர். இது மோதலாக மாறியது. அதைத் தாண்டி ஒன்றுமே நடக்கவில்லை’. முதல் வாக்குச் சாவடி கைப்பற்றல் நிகழ்வு குறித்து இப்படி முரண்பட்ட தகவல்கள் இருந்தாலும், அதையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு, பிற்காலத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததையும் இந்திய ஜனநாயகம் பார்த்திருக்கிறது!