கருணாநிதி வல்லவர், நல்லவரில்லை; ஆனால் ஸ்டாலின் வல்லவரும் அல்ல, நல்லவரும் அல்ல என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரையில் இன்று அதிமுக வேட்பாளருக்காகப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் செல்லூர் ராஜூ பேசும்போது, ''கருணாநிதி மிகப்பெரும் வல்லமை மிக்கவர். ஆனால் நல்லவர் அல்ல. இதை நான் சொல்லவில்லை, எம்ஜிஆர் சொன்னார். ஆனால் ஸ்டாலின் வல்லவரும் அல்ல; நல்லவரும் அல்ல.
தேர்தல் குறித்து புலம்புகிறார் ஸ்டாலின். அவர் அமைத்திருக்கும் கூட்டணியில் என்ன நடக்கிறது? திமுக சார்பில் மதுரையில் மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது. அந்த வேட்பாளர் (சு.வெங்கடேசன்) நல்லவர்தான். ஆனால் எப்படி நல்லவர்?
தமிழில் நன்றாக எழுதுவார்; கவிதை பாடுவார். வரலாற்றுப் புதினங்களை எழுதக்கூடியவர். அதற்காக அவரைப் போய் ஏன் அரசியலுக்குக் கொண்டுவர வேண்டும்? அவர் அரசியல் வேண்டாமென்று சென்றவர். அவரைக் கொண்டுவந்து ஏன் போட்டியிட வைக்க வேண்டும்? வேறு ஆட்கள் யாரும் இல்லாததால் இவரைப் பிடித்துக் கொண்டுவந்து போட்டிருக்கின்றனர்'' என்றார் செல்லூர் ராஜூ.