தமிழகத்தில் மக்களவைத் தேர்தலோடு நடை பெறவிருக்கும் 21 சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தலில் வெற்றிபெற அமமுக புது வியூகம் வகுத்துள்ளது. அதிமுகவை முந்திக்கொண்டு, தொகுதிகளில் களத்தில் இறங்கிய கட்சியினருக்கு அமமுக மேலிடம் `கவனிப்பில்' ஈடுப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்காக அதிமுக, திமுக வலுவான கூட்டணியை அமைத்துள்ளன. தேர்தலில் வலுவான கூட்டணிகளுடன் மோதி வெற்றி பெறுவது சிரமம். இந்நிலையில், அதிமுகவை மீட்போம் என்ற டிடிவி தினகரனின் முழக்கமும் எடுபடவில்லை.
இதனால் இடைத்தேர்தல் நடக்கவிருக்கும் 21 சட்ட பேரவைத் தொகுதிகளில் குறிப்பிட்ட தொகுதிகளைக் கைப்பற்றி, முதல்வர் கே. பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தலாம் என டிடிவி தினகரன் முடிவு செய்துள்ளதாகவும், இதற்காக புது வியூகத்தைப் பயன்படுத்த இருப்பதாகவும் அதை தேர்தல் நெருங்க நெருங்க 21 தொகுதிகளில் பார்க்க முடியும் அக்கட்சியினர் கூறுகின்றனர்.
சிவகங்கை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஆலங்குடி, திருமயம் ஆகிய தொகுதிகளில் அதிமுக ஈபிஎஸ், ஓபிஎஸ் அணியாகப் பிரிந்து மல்லுக்கட்டுவதை அமமுக வாய்ப்பாக்கியுள்ளது. மேலும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த அறந்தாங்கி தொகுதி அதிமுக எம்எல்ஏ ரத்தினசபாபதியை அமமுக பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தி வருகிறது.
எம்எல்ஏ ரத்தினசபாபதி அமமுகவின் பொதுக் கூட்டங்களில் பேசும்போது, ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் பாஜக, பாமகவோடு கூட்டணி வைத்திருக்க மாட்டார். தற்போதிருக்கும் ஈபிஎஸ், ஓபிஎஸ் ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்த கட்சிகளோடு கூட்டணி வைத்துள்ளனர். இதன் மூலம் அம்மாவுக்கு துரோகம் செய்துள்ளனர் எனக் கடுமையாக சாடி வருகிறார். இவரது பேச்சு அதிமுகவின் அடிமட்டத் தொண்டர்களை யோசிக்க வைத்துள்ளது. மேலும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவும் அதிமுக அரசை கடு மையாக விமர்சித்துப் பேசியதை அக் கட்சியினர் விரும்பவில்லை. இதுவும் அதிமுகவினரிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திலையைப் பயன்படுத்தி வாக்குகளை அறுவடை செய்வதில் அமமுக முன் னணியில் உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் கடந்த மாதம் நடந்த மக்கள் சந்திப்பு பயணத்தின்போது வந்த டிடிவி. தினகரன், கட்சி நிர்வாகிகளை நன்கு `கவனித்து' உற்சாகப்படுத்தியுள்ளார். இந்த உற்சாகம் அமமுகவினரை சுறுசுறுப்புடனும், விறுவிறுப்புடனும் தேர்தல் களம் காணத் தயார்படுத்தியுள்ளது.
இது குறித்து அமமுகவினர் கூறியதாவது: இடைத் தேர்தலில் அதிமுக குறைந்தது 6 தொகுதிகளாவது வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஆட்சியைத் தக்க வைக்க மக்களவைத் தேர்தலைவிட, இடைத் தேர்தலுக்கே அதிமுக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
21 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஒன்றைக்கூட கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கவில்லை. தொகுதிகளைக் கேட்காமல் இருக்க மக்களவைத் தொகுதிகளை தாராளமாக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது. இதனால் எங்கள் துணைப் பொதுச் செயலாளரும் மக்களவை தேர்தலைவிட இடைத்தேர்தலுக்கே முக்கியத்துவம் கொடுக்க முடிவு செய்துள்ளார்.
மேலும் ஜெயலலிதா விரும்பாத பாஜக, பாமகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளது. இதைத் தேர்தல் பிரச்சாரத்தில் கூறினாலே போதும், உண்மையான ஜெயலலிதா விசுவாசிகள் எங்களுக்கு வாக்களிப்பர். இதுதவிர ஆளும் கட்சியினர் மீதான அதிருப்தி, திமுகவில் ஸ்டாலின் தலைமையை ஏற்காதது போன்ற காரணங்களால் குறிப்பிட்ட தொகுதிகளில் நாங்கள் வெற்றி பெறுவோம். இதன் மூலம் ஆட்சி தானாக கவிழ்ந்து விடும். ஆட்சி இல்லாவிட்டாலே அதிமுகவில் பெரும்பாலானோர் எங்களிடம் வந்து விடுவர். அதன் பின் அதிமுக எங்களுக்கு வந்துவிடும், என்றனர்.