நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பரும் குஜராத் முன்னாள் அமைச்சருமான அமித் ஷாவின் பழிவாங்கும் பேச்சு தொடர்பாக, அவரிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் கலவரம் பாதித்த முசாபர் நகர் பகுதியில் பேசிய அமித் ஷா, “ஜாட் சமூகத்தினர் கொல்லப்பட்டதற்கு பழிவாங்க வேண்டுமெனில் பாஜக வுக்கு வாக்களியுங்கள்” என்று கூறியிருந்தார்.
சமூக அமைதிக்கு எதிரான இப்பேச்சு தொடர்பாக, அவர் மீது பிஜ்னோர் நகர போலீஸார் பல்வேறு பிரிவுகளின் கீழ் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் அமித் ஷாவிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உ.பி.யின் ஷாம்லி, பிஜ்னோர், முசாபர் நகர் மாவட்டங்களில் பேசும் போது, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது என்பதற்கு 3 நாள்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என கேட்கப்பட்டுள்ளது.