மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்ட சூழலில், சில நாட்களுக்கு முன்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் வரைந்த கோலத்தில் ‘தாமரைப் பூ’ இருந்ததால், தேர்தல் நடத்தை நெறிமுறைகளுக்கு எதிரானது என்று ஓடிச் சென்று அதை அழித்தார்களாம்! இச்செய்தியைப் படித்தவுடன், வீடுகளில் பெரியவர்கள் சொல்லும் சொலவடை நினைவுக்கு வருகிறது. ‘போட்ட கோலத்தை அழிப்பதற்காவது இந்த வீட்டுக்குப் பிள்ளை வரட்டும்’ என்பார்கள்.
தேர்தல் நடத்தை நெறிமுறைகளை அமல்படுத்துவதற்கு மிகவும் ‘சின்னப் பிள்ளைகளை’ வேலைக்கு அமர்த்தியிருப்பார்களோ என்று தோன்றுகிறது. இதே ரீதியில் போனால், ‘தாமரைப் பூவில் அமர்ந்தவளே – செந்தூரத் திலகம் அணிந்தவளே’ என்று யாராவது பாடினால் ஓடிச் சென்று வாயைப் பொத்துவார்கள் போலிருக்கிறது. இந்த சிறு பிள்ளைத்தனம் யாரிடமோ அல்ல, 47 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த மிகப் பெரிய அரசியல் தலைவர்களுக்கும் இருந்தது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்த இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸுக்கு 1971 தேர்தலின்போது ‘பசுவும் கன்றும்’ சின்னம் ஒதுக்கப்பட்டது. அதை ஸ்தாபன காங்கிரஸ், சுதந்திரா, பாரதிய லோகதளம், ஜன சங்கம் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் கடுமையாக ஆட்சேபித்தனர். ‘பசுவை வழிபடுவது இந்துக்களின் வழக்கம். மதச் சின்னங்களைத் தேர்தல் சின்னங்களாக அளிக்கக் கூடாது. பசுவின் மீதுள்ள பக்தியால் மக்கள் அதற்குத்தான் வாக்களிப்பார்கள்’ என்று இந்தக் கட்சிகளின் தலைவர்கள் தேர்தல் ஆணையத்திடம் ஆட்சேபித்தனர். கர்நாடகத்தின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.நிஜலிங்கப்பா, காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவராக இருந்த கே.காமராஜ் ஆகியோரும் ‘பசு-கன்று’ சின்னத்தைக் கடுமையாக எதிர்த்தனர்.
இதை அப்போதைய தேர்தல் ஆணையர் எஸ்.பி. சென் வர்மா ஏற்கவில்லை. ‘பசுவும் கன்றும்’ மத அடையாளங்கள் என்றால் சம்யுக்த சோஷலிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கியுள்ள ‘ஆலமரம்’, திமுகவுக்கு ஒதுக்கியுள்ள ‘உதயசூரியன்’, சுதந்திரா கட்சிக்கு ஒதுக்கியுள்ள ‘நட்சத்திரம்’, பாரதிய ஜன சங்க கட்சிக்கு ஒதுக்கியுள்ள ‘அகல் விளக்கு’ எல்லாம் என்ன? ‘யானை’, ‘சிங்கம்’ போன்றவை கூட சின்னங்களாகியுள்ளன. அவையெல்லாம் வணங்கப்படுவதில்லையா? அப்படிப் பார்த்தால் இந்தியாவில் எந்த உருவத்தையும் தேர்தல் சின்னமாகவே வைக்க முடியாது என்று அவர் மறுத்துவிட்டார்.