அதிமுக சார்பில் பெரியகுளம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் திடீரென மாற்றப்பட்டுள்ளார்.
அதிமுக சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பாக அறிவிக்கப்பட்டன. பெரியகுளம் தொகுதியில் ஏற்கெனவே முருகன் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவரை மாற்றி மயில்வேல் என்பவரை வேட்பாளராக அதிமுக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரான முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருவரும் இன்று (வெள்ளிக்கிழமை) கூட்டாக வெளியிட்ட அறிவிப்பில், "அதிமுக ஆட்சி மன்றக்குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 18-04-2019 அன்று நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தேனி மாவட்டம், பெரியகுளம் (தனி) சட்டப்பேரவை தொகுதிக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த வேட்பாளருக்கு பதிலாக, அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக மயில்வேல் (தேனி -அல்லி நகர புரட்சித்தலைவி அம்மா பேரவை துணைச் செயலாளர்) தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சிக்குள் ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாக பெரியகுளம் வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியான சிறிது நேரத்துக்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.