5 ஆண்டுகளாக ராமேஸ்வரத்தை கவனிக்காத பாஜக, இப்போது வடக்கே காசியைப் போல் தெற்கே ராமேஸ்வரம் என்று திடீர் அக்கறை காட்டும் பாசாங்கு ராமநாதபுரம் மக்களிடம் எடுபடாது என்கிறார் திமுக கூட்டணியில் களம் காணும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி.
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில், இந்த மாவட்டத்தின் முதுகுளத்தூர், பரமக்குடி, திருவாடானை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டத்தின் அறந்தாங்கி, விருதுநகர் மாவட்டத்தின் திருச்சுழி ஆகிய சட்டப்பேரவைப் தொகுதிகள் உள்ளன.
இத்தொகுதியில், அதிமுக சார்பில் கூட்டணிக் கட்சியான பாஜகவின் நயினார் நாகேந்திரன் நிறுத்தப்பட்டுள்ளார். அமமுக சார்பில் வ.து.ந. ஆனந்த் களம் காண்கிறார். நயினார் நாகேந்திரன், ஆனந்த் இருவருமே அதிமுக பின்னணி கொண்டவர்கள். நயினார் நாகேந்திரன், நவாஸ் கனி இருவருமே வெளியூரில் வசிக்கின்றனர். உள்ளூர் செல்வாக்கு அமமுகவுக்கு, அதிமுக செல்வாக்கு நயினாருக்கு என இருக்க, சிறுபான்மையினர் வாக்குகள், மதச்சார்பற்றவர்கள் வாக்குகளை எதிர்நோக்கியுள்ளார் நவாஸ் கனி.
‘இந்து தமிழ்திசை’ இணையதளத்துக்கு அவர் அளித்த பேட்டி...
கள நிலவரம் எப்படி இருக்கிறது? இதுவரை மேற்கொண்ட பிரச்சாரப் பயணத்தை வைத்து சொல்லுங்கள்...
கள நிலவரம் நிச்சயமாக திமுக கூட்டணிக்கே சாதகமாக இருக்கிறது. இப்போதுகூட ராமேஸ்வரம் நோக்கி பிரச்சாரத்துக்குத்தான் சென்றுகொண்டு இருக்கிறேன். பிரச்சாரத்துக்குச் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் ஆதரவு அமோகமாக இருக்கிறது. மத்திய, மாநில அரசுகளின் மீது மக்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர். அந்த அதிருப்திதான் எங்களுக்கான வாக்குகள்.
பாஜக, நயினார் நாகேந்திரனைக் களம் இறக்கியுள்ளது. அவர் அதிமுகவில் அமைச்சராக இருந்தவர். இப்போது கூட்டணியில் இருப்பதால் அந்த ஆதரவும் இருக்கும். எப்படி சமாளிக்கப் போகிறீர்கள்?
எதுவுமே செய்ய வேண்டாம். ஏற்கெனவே சொன்னதுபோல் மக்கள் அதிருப்தியே போதும். விவசாயிகள், பயிர்களுக்கான காப்பீட்டுத்தொகை கிடைக்காமல் தவிக்கின்றனர். நெசவாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், மீனவர் பிரச்சினைக்குத் தீர்வில்லை, மீனவர்களுக்கான தனி அமைச்சகம் என்ன ஆனது என்று தெரியவில்லை. ஜிஎஸ்டியால் சிறு வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் கல்விக்கடன் கிடைக்காமல் தவிக்கின்றனர். படித்து முடித்த இளைஞர்களுக்கு வேலை இல்லை. இவ்வளவு சிக்கலுக்கும் மத்திய, மாநில அரசுகள்தானே காரணம்.
தொகுதி மக்களுக்கு உங்கள் வாக்குறுதி என்ன?
ராமநாதபுரம் தண்ணீர் பிரச்சினையில் தவிக்கிறது. குடிதண்ணீர் பிரச்சினையைத் தீர்க்க நரிக்குடியில் கடல்நீரைக் குடிநீராக மாற்ற அமைக்கப்பட்ட சுத்திகரிப்பு ஆலை முடக்கப்பட்டுள்ளது. காவிரியில் இருந்து தண்ணீர் கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டுக் குடிநீர்த் திட்டமும் இப்போது செயல்பாட்டில் இல்லை. ராமநாதபுரம் மக்களின் தண்ணீர் பிரச்சினையைத் தீர்ப்பதையே பிரதான கடமையாகக் கருதுகிறேன்.
வடக்கே காசியைப் போல தெற்கே ராமேஸ்வரம் எங்களுக்கு என்கிறதே பாஜக?
மத்தியில் கடந்த 5 ஆண்டு காலம் பாஜக ஆட்சிதானே நடந்தது. அப்போது ராமேஸ்வரத்துக்குச் செய்ய முடியாததையா இப்போது ஒரே ஒரு எம்.பி.யைக் கொண்டு செய்துவிடப் போகிறார்கள்?
சமீபகாலமாக ஆர்.எஸ்.எஸ். தாக்கத்தால் ராமநாதபுரம் மத ரீதியாகப் பிரிந்து கிடப்பதாகச் சொல்லப்படுகிறதே?
நிச்சயமாக இல்லை. ராமநாதபுரத்தில் மத நல்லிணக்கத்துக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. வாக்குகளுக்காக யாராவது இப்படிச் சொல்லலாம்.
ராமநாதபுரத்தில் திமுக கோஷ்டி பூசலால் கூட்டணிக் கட்சியான உங்களுக்கு களப்பணி செய்வதில் சுணக்கம் ஏற்பட்டதாக சொல்லப்படுவது குறித்து...
திமுகவினர் எங்களுக்காக உற்சாகமாகச் செயல்படுகின்றனர். உறுதுணையாகக் களத்தில் நிற்கின்றனர். திமுக கூட்டணிக்குத்தான் இங்கும் வெற்றி, எங்கும் வெற்றி.
இவ்வாறு நவாஸ் கனி கூறினார்.