மற்றவை

இதுதான் இந்தத் தொகுதி: ஈரோடு

செய்திப்பிரிவு

திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவரான பெரியார், கணிதமேதை ராமானுஜன் ஆகியோர் பிறந்த பெருமைக்குரிய நகரம் ஈரோடு. மஞ்சள் நகரம், ஜவுளி நகரம் என்ற பெயர்களும் உண்டு. 2008-ல் தொகுதி மறுசீரமைப்பின்போது, திருச்செங்கோடு மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டு, அதிலிருந்து சில தொகுதிகளை எடுத்தும், புதிய தொகுதிகளைச் சேர்த்தும் ஈரோடு மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தின் ஈரோடு மேற்கு, ஈரோடு கிழக்கு, மொடக்குறிச்சி, திருப்பூர் மாவட்டத்தின் தாராபுரம் (தனி), காங்கேயம், நாமக்கல் மாவட்டத்தின் குமாரபாளையம் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகள் ஈரோடு மக்களவைத் தொகுதியில் உள்ளன.

பொருளாதாரத்தின் திசை: பவானிசாகர் அணையிலிருந்து திறக்கப்படும் நீர், பாசனத்துக்கு ஆதாரமாக உள்ளது குடிநீருக்கு ஆதாரமாக இருப்பது காவிரி ஆற்று நீர். நெல், மஞ்சள், நிலக்கடலை, கரும்பு, வாழை, மரவள்ளி ஆகியவை முக்கியப் பயிர்கள். வேளாண்மைக்கு அடுத்தபடியாக ஜவுளித் துறை சார்ந்த தொழில்கள் இங்கு உள்ளன. ஈரோடு ஜவுளிச் சந்தையைச் சார்ந்து, சிறிய மற்றும் மொத்த ஜவுளி வியாபாரிகள், விசைத்தறியாளர்கள், சாய, சலவைத் தொழிற்சாலை நடத்துபவர்கள் இயங்கிவருகிறார்கள்.

தீர்மானிக்கும் பிரச்சினைகள்: சாயக் கழிவு, தோல் கழிவுநீர் வெளியேற்றம் காரணமாக புற்றுநோய் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. வேளாண்மைக்கான நீர்ப் பற்றாக்குறை காரணமாக, பாசனப் பரப்பு குறைந்துவருகிறது. காலிங்கராயன், கீழ்பவானி கால்வாய்ப் பாசனத்துக்கு நீர் திறப்பதில் ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் சிக்கல், விவசாயிகளைக் கடுமையாகப் பாதித்துவருகிறது. மஞ்சள் உள்ளிட்ட விவசாய விளைபொருட்களுக்கான விலை, தொடர்ந்து சரிவைச் சந்தித்துவருவது இத்தொகுதியின் முக்கியமான பிரச்சினை. ஈரோடு நகரைச் சுற்றி அமைக்கப்படும் வெளிவட்டச் சாலைப் பணிகள் முடிவடையாமல் இழுத்துக்கொண்டே போகின்றன. புறநகர் பேருந்து நிலைய அறிவிப்பு செயல்பாட்டுக்கு வரவில்லை.

நீண்ட காலக் கோரிக்கைகள்: ஈரோடு - பழனி ரயில் திட்டம், ஒருங்கிணைந்த ஜவுளிச் சந்தை, ஒருங்கிணைந்த மஞ்சள் வணிக வளாகம் அமைத்தல், பொது சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல் வேண்டும் என்று விரும்புகிறார்கள் இத்தொகுதி மக்கள். காங்கயம், தாராபுரம் பகுதிகளில் எண்ணெய், அரிசி ஆலைத் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும், கரும்புக்கு அரசு நிர்ணயித்த தொகையை சர்க்கரை ஆலைகள் நிலுவையின்றி வழங்க வேண்டும், அரசு தலைமை மருத்துவமனையைப் பல்நோக்கு மருத்துவமனையாகத் தரம் உயர்த்த வேண்டும், ஈரோடு ரயில் நிலையத்தில் கூடுதல் நடைமேடை உள்ளிட்ட வசதிகளைச் செய்து தர வேண்டும் எனப் பல்வேறு கோரிக்கைகள் உள்ளன.

ஒரு சுவாரஸ்யம்: ஈரோடு மக்களவைத் தொகுதிக்குட்பட்ட மொடக்குறிச்சி தொகுதியில், 1996 சட்டமன்றத் தேர்தலின்போது விவசாயிகளின் பிரச்சினைகளை முன்னிறுத்தி, 1,033 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். நாட்டையே திரும்பிப் பார்க்கவைத்த இந்த வேட்புமனு தாக்கல் புரட்சிக்குப் பின்புதான், தேர்தல் விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டு, காப்புத் தொகை கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.

வெற்றியைத் தீர்மானிக்கும் சமூகங்கள்: ஈரோடு மக்களவைத் தொகுதியில் கொங்கு வேளாளக் கவுண்டர் சமுதாயத்தினர் பெரும்பான்மையினராக உள்ளனர். இவர்களுக்கு அடுத்த படியாக, அருந்ததியர் சமூகத்தினரும் செங்குந்த முதலியார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர்.

அதிக வெற்றியை ருசித்தவர்கள்: திருச்செங்கோடு தொகுதியைப் பொறுத்தவரை 1952 தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் எஸ்.கே.பேபி வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து இரு முறை காங்கிரஸ் வென்றுள்ளது. 1967 முதல் 1998 வரை அதிமுக, திமுக கட்சிகளே இங்கு வெற்றிபெற்றுள்ளன. 1998 மக்களவைத் தேர்தலில் திருச்செங்கோட்டில் போட்டியிட்டு வென்றவர் தற்போதைய முதல்வர் பழனிசாமி. ஈரோடு மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்ட பின், 2009 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸின் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனைத் தோற்கடித்து மதிமுக வேட்பாளர் அ.கணேசமூர்த்தி வெற்றிபெற்றார். அந்தத் தேர்தலில் மதிமுக சார்பில் வென்ற ஒரே வேட்பாளர் அவர்தான்!

வாக்காளர்கள் யார்?

மொத்தம் 14,27,531

ஆண்கள் 7,00,013

மூன்றாம் பாலினத்தவர்கள் 107

சமூகங்கள் என்னென்ன?

இந்துக்கள் 94.66%

முஸ்லிம்கள் 2.99%

கிறிஸ்தவர்கள் 2.15%

கிறிஸ்தவர்கள் 2.15%

எழுத்தறிவு எப்படி?

மொத்தம் 75.76%

ஆண்கள் 84.46%

பெண்கள் 67.05%

கடைசியாக மாவட்டவாரியாக எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே புள்ளிவிவரங்கள் தரப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT