மற்றவை

ஜெயலலிதாவை எப்போதும் ஒருமையில் பேசியது இல்லை: ஈவிகேஎஸ் விளக்கம்

செய்திப்பிரிவு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அரசியல் ரீதியாகக் கடுமையாக விமர்சித்தேன். ஆனால்,  தனிப்பட்ட முறையில் அவரை ஒருமையில் பேசியதில்லை என  தேனி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஈரோடு, திருப்பூர்  உள்ளிட்ட தொகுதியில் போட்டியிட விரும்பினேன். அத்தொகுதி தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டதால்,  தமிழகத்தில் எங்கு வேண்டுமானாலும் போட்டியிடலாம் என கட்சி சுதந்திரம் வழங்கியது. இதனால், தேனி தொகுதியில் போட்டியிடுகிறேன்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அரசியல் ரீதியாகக் கடுமையாக விமர்சித்தேன். காங்கிரஸ் தலைவர் சோனியாவை விமர்சனம் செய்ததால் பதிலுக்கு நானும் விமர்சனம் செய்தேன். ஆனால் அவரை தனிப்பட்ட முறையில் ஒருபோதும் ஒருமையில் பேசியதில்லை. ஆனால், பெண் தலைவர் என்ற முறையில் அவரைப் பெரிதும் மதிக்கிறேன்.

தேனி தொகுதியில் மக்கள் ஆதரவு எங்களுக்கு உண்டு. தேனியில் நாளை (இன்று) வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளேன். கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து பணியாற்றுவதால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றார்.

SCROLL FOR NEXT