விண்வெளியில் காவலாளியை உருவாக்குவதற்கு (சவுகிதார்) எங்கள் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று பிரதமர் மோடி ஆவேசமாகப் பேசினார்.
மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக வரும் ஏப்ரல் 11-ம் தேதி முதல் மே 19-ம் தேதி வரை நடைபெறுகிறது. பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
ஒடிசா மாநிலம், கோரபுட் மாவட்டம், ஜேப்பூரில் இன்று நடந்த பாஜக தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது:
''மக்களின் ஆதரவு இல்லாமல் நாட்டில் எந்த ஒருபகுதியிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசால், வளர்ச்சிப் பணிகளைச் செய்ய முடியாது. வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தொண்டர்களின் ஆதரவு, மக்களின் ஆதரவும், ஆசியும் எங்களுக்குத் தேவை.
ஓடிசா மாநிலத்தில் எந்தவிதமான மாற்றத்தையும் கொண்டுவராமல் எந்தவிதமான மேம்பாட்டுப் பணிகளையும் செய்ய முடியாது. கடந்த 5 ஆண்டுகளாக, எங்களுடைய அரசு , 8 லட்சம் குடும்பங்களுக்கு வீடுகளை கட்டிக்கொடுத்துள்ளது, 3 ஆயிரம் வீடுகளுக்கு மின்வசதியும, 40 லட்சம் வீடுகளுக்கு சமையல் கேஸ் வசதியும் அளித்துள்ளது.
விண்வெளியில் நமது செயற்கைக்கோள்களைப் பாதுகாக்க நாங்கள் காவலாளியை (சவுகிதார்) உருவாக்கி இருக்கிறோம். நமது செயற்கைக்கோளுக்கு ஊறுவிளைக்கும் எந்த செயற்கைக்கோளையும் தாக்கி அழிக்கும் வல்லமை உடைய ஏவுகணையைக் கண்டுபிடித்துள்ளோம். அதற்கான மிஷன் சக்தி சோதனையையும் வெற்றிகரமாக கண்டுபிடித்துள்ளோம்.
ஆனால், விண்வெளியில் நாம் படைத்த சாதனையை எதிர்க்கட்சிகள் இகழ்ந்து பேசுகிறார்கள். நம்முடைய ஏ-சாட் தொழில்நுட்ப சாதனையை இழிவாகப் பேசும் எதிர்க்கட்சிகளுக்கு தேர்தலில் தகுந்த பதிலை நீங்கள் அளிக்க வேண்டும். உறுதியான முடிவுகளை அரசு எடுப்பதற்கு பெரும்பான்மை அரசு தேவை. குரல் கொடுப்பதற்காக அரசு அல்லாமல் நிலையான அரசு அமைய வாக்களிக்க வேண்டும்.
உங்களுக்கு வலிமையான அரசு வேண்டுமா அல்லது உதவி செய்ய இயலாத அரசு வேண்டுமா என்பதைப் பார்த்து வாக்களியுங்கள்.
பாலகோட்டில் நமது விமானப்படை நடத்திய தாக்குதல் நடத்தி ஒரு மாதம் ஆகிவிட்டது. ஆனால், பாகிஸ்தான் அரசு தீவிரவாதிகளின் உடல்களை இன்னும் கணக்கிடுவதில் தீவிரமாக இருந்து வருகிறது. ஆனால், நம்முடைய எதிர்க்கட்சிகள் அந்தத் தாக்குதலுக்கு ஆதாரம் கேட்கிறார்கள்.
தீவிரவாதிகளுக்கு எதிராக இந்தியா செயல்படும்போது, நேரடியாக எதிரிகளின் இடத்துக்குச் சென்று அவர்களைத் தாக்குவோம். ஆனால், சிலர் அதற்கு ஆதாரம் கேட்கிறார்கள்''.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.