மற்றவை

சின்னம் இல்லாமல் தவிக்கும் அமமுக வேட்பாளர்கள்

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

அமமுகவுக்கு தேர்தல் ஆணையம் இன்னும் சின்னம் ஒதுக்காததால் அக்கட்சி வேட்பாளர்கள் பிரச்சாரத்துக்குச் செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.

தமிழகத்தில் அமமுக மற்றும் அதன் கூட்டணி சார்பில் 39 மக்களவைத்தொகுதிகள், 18 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல்களில் வேட்பாளர்கள் களமிறங்கி உள்ளனர். அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், ஆர்.கே.நகரில் வெற்றி பெற்ற ‘குக்கர்’ சின்னத்தை கேட்டார். அதை மறுத்த தேர்தல் ஆணையம் தற்போது வரை சின்னம் ஒதுக்கவில்லை.

இதனால் அக்கட்சியின் வேட்பாளர்கள் மக்கள் மத்தியில் பிரச்சாரத்துக்குச் செல்ல முடியாமலும் சின்னத்தைப் விளம்பரப்படுத்த வரைய முடியாமலும் தவிக்கின்றனர். மதுரையில் நேற்று முன்தினம் வேட்புமனுத் தாக்கல் செய்த அமமுக வேட்பாளர் டேவிட் அண்ணாதுரை, சின்னம் ஒதுக்காததால் கடந்த 2 நாட்களாகப் பிரச்சாரத்துக்குச் செல்லவில்லை. அதேநேரத்தில் மற்ற கட்சி வேட்பாளர்கள் தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர். அவர்களுக்கான விஐபி பேச்சாளர்களும் தொகுதிக்குள் வர ஆரம்பித்துள்ளனர். ஆனால், அமமுகவினர் பிரச்சாரத்துக்குச் செல்லவில்லை. தேர்தல் பிரச்சாரத்தின் தொடக்கத்திலேயே சோதனை ஏற்பட்டுள்ளதால் அமமுக வேட்பாளர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

இதுகுறித்து மதுரை அமமுக வேட்பாளர் டேவிட் அண்ணாதுரையிடம் கேட்டபோது, "சின்னம் ஒதுக்காததால் மக்களிடம்எதைச் சொல்லி பிரச்சாரம் செய்வது.

அதனால், தற்போது முக்கியப் பிரமுகர்களைச் சென்று சந்திக்கிறேன். கட்சி நிர்வாகிகளிடம் தேர்தல் பிரச்சாரத்தைத் திட்டமிடுவது, வியூகங்களை வகுப்பது பற்றி ஆலோசிக்கிறேன். சின்னத்துக்காகப் பிரச்சாரத்தைத் தள்ளிவைக்க முடியாது என்பதால் நாளை முதல் தினகரன் பெயரைச் சொல்லி வாக்குக் கேட்க உள்ளேன்" என்றார்.

தேர்தல் அதிகாரி விளக்கம்

அமமுக வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்குவது குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவிடம் கேட்டபோது, ‘‘அமமுகவுக்கு பொதுவான சின்னம் ஒதுக்க பரிசீலிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திடம் கூறியுள்ளது. எனவே, இதுதொடர்பாக ஆணையத்தின் அறிவுரையை கேட்டோம். அப்போது, ஆணையத்தின் மறு உத்தரவு வரும்வரை காத்திருக்குமாறு கூறப்பட்டுள்ளது. இந்த தகவல்களை தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் தெரிவித்துள்ளோம். குக்கர் சின்னம் தொடர்பாகவும் தேர்தல் ஆணையம்தான் முடிவெடுக்கும்’’ என்றார்.

SCROLL FOR NEXT