யோகா முகாம் போன்ற அரசியல் சாராத நிகழ்ச்சிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கான வாய்ப்பு உள்ளது எனத் தெரிந்தால், அதற்கு அனுமதியளிக்கக் கூடாது என்று மாநிலத் தலைமைத் தேர்தல் அலுவலர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
யோகா குரு பாபா ராம் தேவ், வாழும் கலை நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஆகியோர் தாங்கள் நடத்தும் முகாம்களில் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருவதாகவும், தேர்தல் முடியும் வரை அந்த முகாம்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது. இது தொடர்பாக ஆலோசனை நடத்திய தேர்தல் ஆணையம், அத்தகைய முகாம்களுக்கு இனிமேல் அனுமதியளிக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.
மாநிலத் தலைமைத் தேர்தல் அலுவலர்களுக்கு, தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: “யோகாசன முகாம் போன்ற அரசியல் சாராத கூட்டத்துக்கு அனுமதி பெறும் சிலர், அதை தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்துவதாக புகார் வந்துள்ளது.
எனவே, முகாம் நடத்த அனுமதி கோருவோரின் பின்னணியையும், இதற்கு முன்பு அவர்கள் ஏற்பாடு செய்த முகாம்களில் நடைபெற்ற செயல்களையும் ஆய்வு செய்து முடிவு செய்ய வேண்டும். அவர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தால், புதிதாக முகாம் நடத்த அனுமதி அளிக்கக் கூடாது.
முகாம் நடத்துவதற்கான அனுமதியைப் பெற்று பிரச்சாரத் தில் ஈடுபடுவோர் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையத் திடமும், மாநிலத் தலைமைத் தேர்தல் அலுவலரிடமும் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும். அந்த முகாமை ஏற்பாடு செய்ததற்கான செலவுத் தொகை, சம்பந்தப்பட்ட தொகுதியின் வேட்பாளரின் தேர்தல் செலவுக் கணக்கில் சேர்க்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
இதுபோன்ற முகாம்களுக்கு அரசியல் தலைவர்களை அழைக்கக் கூடாது என்று ஏற்கெனவே தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் பாபா ராம்தேவின் யோகா முகாம் ஒன்றில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பங்கேற்றார். இதைத் தொடர்ந்து ராம்தேவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.