வன்முறையே திமுகவின் அடிப்படை கலாச்சாரம் என, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கரூரில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிமுக வேட்பாளர் தம்பிதுரையை ஆதரித்து, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
"குடும்பத் தலைவியாக பெண்களுக்கு காலையிலிருந்து ஓயாத வேலைகள் இருக்கின்றன. அவர்களின் வேலைகளைக் குறைக்க மிக்ஸி, கிரைண்டர் இலவசமாக அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டன. இலவச இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது. அதனால், சகோதரிகள் வாகனம் ஓட்ட சகோதரர்கள் பின்னால் அமர்ந்து செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
அனைத்து தரப்பு மதத்தினரும் அதிமுக ஆட்சியில் நன்றாக இருக்கின்றனர்.
அதிமுக காணாமல் போய்விடும் என்று ஸ்டாலின் சொல்கிறார். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு யார் காணாமல் போகிறார்கள் என்பது தெரியும். அடிக்கும் சுனாமியில் அவர் பறந்து எங்கு சென்று விழுவார் என்பது தெரியாது.
எந்தக் கட்சியிலாவது தொண்டர் முதல்வராக வர முடியுமா? ஆனால், அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் என்ற தொண்டன் முதல்வராக வர முடியும். ஆனால், திமுக, காங்கிரஸில் அப்படி வரவே முடியாது. அதிமுகவில் தனி மனிதத் துதிபாடு இல்லை. அதிக வருடங்கள் தமிழ்நாட்டை ஆண்ட கட்சி அதிமுக.
திமுக ஆட்சியில் தனி மனிதர்களின் சொத்துகள் அபகரிக்கப்பட்டன. திமுகவின் அடிப்படைக் கலாச்சாரம் வன்முறை தான். பிரியாணி, பரோட்டா சாப்பிட்டு விட்டு காசு கொடுக்காதவர்கள் திமுகவினர். ஸ்டாலின் டீக்கடையில் அமர்ந்து டீ குடிக்கிறாராம். இதெல்லாம் பெருமையா? நாம் டீக்கடையே நடத்தியிருக்கிறோம். ஸ்டாலின் 'பாச்சா' நம்மிடம் பலிக்கவே பலிக்காது.
அதிமுக சுனாமி, பூகம்பம் வந்தாலும் அசையாது".
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.