மற்றவை

கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக உள்ளடி வேலைகள்: மாறினார் சுதர்சன நாச்சியப்பன்.. மாற்றினார் ராகுல் காந்தி

இ.ஜெகநாதன்

டெல்லி  காங்கிரஸ் தலைமையின் கடும் எச்சரிக்கையால் சுதர்சன நாச்சியப்பன் சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட் பாளர் கார்த்தி சிதம்பரத்தை  அவசர, அவசரமாக சந்தித்து  ஆதரவு தெரிவித்தார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம் பரம் மாநிலங்களவை உறுப்பினராக இருப்பதால், சிவகங்கை மக்களவைத் தொகுதியில் எப்படியும் இந்தத் தேர்தலில் சீட் வாங்கிவிடலாம் என்ற எண்ணத்தில் சுதர்சன நாச்சியப்பன் முயற்சித்து வந்தார்.  ஆனால், கட்சித் தலைமை கார்த்தி சிதம்பரத்துக்கு மீண்டும் சீட் கொடுத்ததால் அதிருப்தி அடைந்த சுதர்சன நாச்சியப்பன், ப.சிதம்பரத்துக்கு எதிராக ஊடகவியலாளர்களிடம் பகிரங்கமாகவே குற்றச்சாட்டுகளைக் கூறினார். இதனால், அதிர்ச்சியடைந்த ப.சிதம்பரம் இது குறித்து ராகுல் காந்தியின் கவனத்துக்குக் கொண்டு சென்றார். சுதர்சன நாச்சியப்பனை கட்சித் தலைமை கடுமையாக எச்சரித்தது. இதையடுத்து, அழைப்பு இல்லாத நிலையிலும், அவசர, அவசரமாக நேற்று முன்தினம் இரவு காரைக்குடியில் நடைபெற்ற காங்கிரஸ் செயல்வீரர்கள்   கூட்டத்துக்குச் சென்றார். அவர் வருவதற்கு முன்னதாகவே கார்த்தி சிதம்பரம் கூட்டத்தில் பேசிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். ஆனால், சுதர்சன நாச்சியப்பன் வந்தது குறித்து  தகவல் தெரிவித்ததும் கார்த்தி சிதம்பரம் மீண்டும் கூட்டத்துக்கு வந்தார். அவரிடம் தனது ஆதரவை சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்தார்.

கூட்டத்தில், சுதர்சன நாச்சியப்பன் பேசுகையில், இந்தக் காலக்கட்டத்தில் ராகுலை பிரதமராக்க வேண்டும் என்பதே நோக்கமாக இருக்க வேண்டும்.  அதற்காகத்தான் இந்த செயல்வீரர்கள் கூட்டத்துக்கு வந்துள்ளேன். 100 ஆண்டுகளாக காங்கிரஸ் தொண்டர் குடும்பம் என்ற முறையில் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கிறேன். இதற்கு அழைப்பு இருக்கா? இல்லையா? என்பதைப் பார்க்கக் கூடாது என்றார். இதன் மூலம் காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்துக்கு  தனக்கு அழைப்பு விடுக்கவில்லை என்பதையும் அவர் நாசுக்காகத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT