மத்திய அரசுக்கு சேவகம் செய்யும் அதிமுக அரசிடம் இருந்து தமிழகத்தை எங்களின் கூட்டணி மீட்கும் என்று வைகோ உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தென்காசி மக்களவைத் தொகுதிக்காக திமுக வேட்பாளர் தனுஷ் குமாரை ஆதரித்து வைகோ பேசினார். அப்போது அவர், ''தமிழகத்துக்கு எதிரான திட்டங்களைக் கொண்டுவரத் துடிக்கும் மத்திய அரசுக்கு சேவகம் செய்யும் அரசாக தமிழக அரசு இருக்கிறது.
தமிழக அரசு ஊழல் நிறைந்த அரசு. இந்நிலையை மாற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கும்.
ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுப்போம் என்று முழக்கமிட்டீர்களே? 20 லட்சம் பேருக்குக் கூட ஏன் வேலை கொடுக்கவில்லை. ஐந்தாண்டுகள் கடந்துவிட்டன.
மத்திய அரசின் புள்ளியியல் துறை, இந்தியாவிலேயே வேலையில்லாத் திண்டாட்டம் அதிகம் உள்ள மாநிலம் தமிழகம் என்கிறது. 6.2% வேலையின்மை உள்ளதாகப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது'' என்றார் வைகோ.