சிறிய கட்சிகளுக்கு ஜாக்பாட் என்று மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து தயாநிதி அழகிரி கிண்டலாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. திமுக கூட்டணி முடிவாகிவிட்ட நிலையில், அதிமுக கூட்டணியில் இழுபறி நீடித்து வருகிறது. தேமுதிக கட்சி யாருடன் கூட்டணி என்பது இன்னும் முடிவாகவில்லை. அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், இன்னும் கூட்டணி முடிவாகவில்லை.
மேலும், இன்று (மார்ச் 6) மாலை நடைபெறவிருந்த பிரதர் மோடியின் பொதுக் கூட்டத்திலிருந்து விஜயகாந்த் புகைப்படம் அகற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அதிமுக - பாஜக கூட்டணியில் தேமுதிக இடம்பெறாது என்று தெரிகிறது.
இந்நிலையில் மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் இருக்கும் சின்ன அரசியல் கட்சிகளுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. ஒரு சீட்டுக்குக் கூட தகுதி இல்லாத, தகுதியின்றி பல சீட்டுகள் பெற்ற கட்சிகள் எல்லாம் இந்த வெற்றிடத்தை பயன்படுத்தி கொண்டாடுகின்றன.
இன்னும் சில வருடங்களுக்கு தமிழக அரசியலில் இருக்கும் வெற்றிடத்தை நிரப்பவே முடியாது. (இந்த ட்வீட்டுடன் #KK #JJ என்று குறிப்பிட்டுள்ளார். கருணாநிதி மற்றும் ஜெயலலிதா இருவரது பெயரைத் தான் #KK #JJ என்று குறிப்பிட்டுள்ளார்)
இவ்வாறு தயாநிதி அழகிரி தெரிவித்துள்ளார்.