மற்றவை

நெருக்கடிக்கு வித்திட்ட தேர்தல் வழக்கு!

ஜூரி

ஐந்தாவது பொதுத் தேர்தல், 1971-ல் நடப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இந்திய தேசிய காங்கிரஸ் இரண்டாக உடைந்திருந்தது. புதிய காங்கிரஸ் கட்சியின் தலைவராகியிருந்தார் இந்திரா காந்தி. 518 மக்களவைத் தொகுதிகளுக்கு நடந்த அந்தத் தேர்தலில், அவரது தலைமையிலான காங்கிரஸ் 352 தொகுதிகளில் வென்றது. மீண்டும் பிரதமரானார் இந்திரா. ‘வறுமையை ஒழிப்போம்’ எனும் வாக்குறுதி அவரது வெற்றிக்குத் துணை நின்றது.  அந்த ஆட்சிக் காலத்தில்தான் பசுமைப் புரட்சி திட்டத்தால் உணவுதானிய உற்பத்தி பெருகியது. பற்றாக்குறை மறைந்து தன்னிறைவு ஏற்பட்டது. பசுமைப் புரட்சியின் பின்விளைவுகள் விமர்சிக்கப்படுவது தனிக்கதை!

அந்தத் தேர்தலில் 16 இடங்களில் மட்டுமே வென்றது ஸ்தாபன காங்கிரஸ். தமிழகத்தைப் பொறுத்தவரை, இந்திரா காந்தியின் காங்கிரஸோடு கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட திமுக 23 தொகுதிகளில் வென்றது. அந்தக் கூட்டணிக்கு மொத்தம் 38 இடங்கள் கிடைத்தன. 1969-ல் காங்கிரஸ் இரண்டாக உடைந்திருந்த நிலையில், திமுகவின் 25 எம்.பி.க்களும் இந்திரா தலைமையிலான அரசுக்கு ஆதரவளித்தனர். அந்த அடிப்படையில் இந்தத் தேர்தலில் கூட்டணி அமைந்தது.

ஒருகட்டத்தில் இந்திரா தலைமையிலான புதிய காங்கிரஸ் கட்சியில் அவரது நெருங்கிய ஆலோசகர்கள், சகாக்களின் ஆதிக்கம் அதிகரித்தது. தேசிய அளவில் இடதுசாரிக் கட்சிகள் படிப்படியாக வலுப்பெறத் தொடங்கின. ஸ்தாபன காங்கிரஸ் வலுவிழக்கத் தொடங்கியது. சோஷலிஸ்ட்டுகள், ஸ்தாபன காங்கிரஸ் கட்சியினர், பாரதிய ஜனசங்கம் இணைந்து செயல்படத் தொடங்கினர்.

1971 தேர்தலில் ராய்பரேலி தொகுதியில் இந்திரா காந்தி பெற்ற அமோக வெற்றி பின்னர் சர்ச்சைக்குள்ளானது. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ராஜ்நாராயண், ‘ தேர்தல் பிரச்சாரத்தின்போது அரசு இயந்திரங்களையும் அதிகாரிகளையும் நடத்தை நெறிமுறைகளுக்கு முரணாக இந்திரா பயன்படுத்தினார்’ என்று வழக்கு தொடுத்தார். தீர்ப்பு இந்திரா காந்திக்கு எதிராக வந்தது. அவருடைய தேர்தல் முடிவு ரத்து செய்யப்பட்டதுடன் ஆறு ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிட அவருக்குத் தடையும் விதிக்கப்பட்டது. அலாகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ஜக்மோகன் லால் சின்ஹா இந்தத் தீர்ப்பை வெளியிட்டார்.  இதைத் தொடர்ந்து இந்திய அரசியலில் உருவான கொந்தளிப்பை ஒட்டுமொத்த நாடும் உணர்ந்தது – அது இந்திரா காந்தி கொண்டுவந்த நெருக்கடி நிலை!

SCROLL FOR NEXT