மற்றவை

திருநாவுக்கரசரின் பெரிய சாதனை.. ‘சின்ன’ சாதனை- ‘கை’ கொடுக்குமா திருச்சி?

கே.சுரேஷ்

அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கிய பிறகு, 1977-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதியில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் சு.திருநாவுக்கரசர் (அப்போது எஸ்.திருநாவுக்கரசு).

1980, 1984 தேர்தல்களிலும் இதே தொகுதியில் வென்றார்எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகுஅதிமுக பிளவுபட்டபோது 1989-ல்இதே தொகுதியில் ஜெ. அணி சார்பில்சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வென்றார். அதிமுகவில் இருந்து 1991-ல் விலகியவர், அண்ணா புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி திமுகவுடன் கூட்டணி அமைத்து, அறந்தாங்கி தொகுதியில் குடை சின்னத்தில் போட்டியிட்டு வென்றார்.

1996-ல் அதிமுக சார்பில் அறந்தாங்கியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்றார். ஒரே தொகுதியில் தொடர்ந்து 6 முறை வென்ற ஒரே தமிழக எம்எல்ஏ என்ற அவரது சாதனை இன்னும் முறியடிக்கப்படவில்லை.

பின்னர், அதிமுகவில் இருந்து விலகி எம்ஜிஆர் அதிமுக என்ற கட்சியைத் தொடங்கினார். 1998மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து புதுக்கோட்டையில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

1999 மக்களவைத் தேர்தலில், புதுக்கோட்டையில் திமுக - பாஜக கூட்டணியில் இடம்பெற்ற எம்ஜிஆர் அதிமுக சார்பில் மோதிரம் சின்னத்தில் போட்டியிட்டு வென்றார்.

எம்ஜிஆர் அதிமுகவை பாஜகவுடன் இணைத்தார். பாஜக வேட்பாளராக 2009-ல் ராமநாதபுரம் தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

பாஜகவில் இருந்து விலகி, காங்கிரஸில் இணைந்தார். 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் அறந்தாங்கி தொகுதியில் கை சின்னத்தில் போட்டியிட்டு, தோல்வியடைந்தார்.

2014 மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரத்தில் காங்கிரஸ் வேட்பாளராக கை சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

தற்போது திருச்சி தொகுதியைப் பெற்றுள்ள திருநாவுக்கரசர், கை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

கடந்த தேர்தல்களில் இரட்டை இலை, சேவல், குடை, மாம்பழம், மோதிரம், தாமரை, கை என 7 சின்னங்களில் போட்டியிட்ட திருநாவுக்கரசருக்கு திருச்சி தொகுதி ‘கை’ கொடுக்குமா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

SCROLL FOR NEXT