வேட்புமனு தாக்கல் செய்ய வந்த போது, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நீலகிரி எம்.பி. மற்றும் பவானிசாகர் எம்எல்ஏ வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மக்களவைத் தொகுதிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எம்.தியாகராஜன் உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார். தேர்தல் நடத்தை விதிகளின் படி அவருடன் நான்கு பேர் மட்டுமே ஆட்சியர் அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இதனால், நீலகிரி எம்.பி. கோபாலகிருஷ்ணன், குன்னூர் எம்எல்ஏ சாந்தி ராமு, அவினாசி எம்எல்ஏ கருப்பசாமி, பவானிசாகர் எம்எல்ஏ ஈஸ்வரன் ஆகியோர் ஆட்சியர் அலுவலக வளாத்தில் நிறுத்தப்பட்டனர்.
இந்நிலையில், நீலகிரி எம்.பி. கோபாலகிருஷ்ணனைப் பார்த்து பவானிசாகர் எம்எல்ஏ ஈஸ்வரன், ''நீங்கள் தொகுதி பக்கமே விரவில்லை. நன்றி சொல்ல கூட பவானிசாகருக்கு நீங்கள் வரவில்லை. இதனால், நாங்கள் மக்களைச் சந்திக்க முடிவதில்லை. மக்களிடம் அதிமுகவுக்கு ஓட்டு கேட்டு செல்ல முடியவில்லை. உங்களால் தான் அதிமுக நாசமானது'' என்றார்.
இதனால், ஆத்திரமடைந்த எம்.பி. கோபாலகிருஷ்ணன், ஈஸ்வரனைத் தகாத வார்த்தைகளால் வசை பாடினார். மேலும், ''உன்னை ஜெயிக்க வைக்க நான் லட்சக்கணக்கில் செலவு செய்துள்ளேன். மரியாதையாக இங்கிருந்து சென்று விடு'' என மிரட்டல் விடுத்தார். இதனால், இருவரிடையே கைகலப்பு உருவாகும் சூழல் ஏற்பட்டது. உடனே குன்னூர் எம்எல்ஏ சாந்தி ராமு, ஈஸ்வரனை அப்பகுதியிலிருந்து வேறு பகுதிக்கு அழைத்துச் சென்றார்.
இருவரிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.