மற்றவை

அமமுக வேட்பாளர்கள் நோட்டாவை விட குறைவாக வாக்குகள் பெறாமல் இருந்தால் சரிதான்: அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்

செய்திப்பிரிவு

அமமுக வேட்பாளர்கள் நோட்டாவை விட குறைவாக வாக்குகள் பெறாமல் இருந்தால் சரிதான் என, அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலாகத் தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரனின் அமமுக கட்சிக்கு பரிசுப்பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து இன்று (வெள்ளிக்கிழமை) தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், "பரிசுப்பெட்டி சின்னத்தால் அதிமுகவுக்கு ஒரு சவாலும் கிடையாது. ஆர்.கே.நகரில் 20 ரூபாய் டோக்கன் கொடுத்து தான் குக்கர் சின்னத்தில் டிடிவி தினகரன் வென்றார்.

ஆர்.கே.நகர் அப்பாவி ஏழை, எளிய, நடுத்தர மக்கள், தொழிலாளிகள் நிறைந்த பகுதி. ஒருவருக்கு 20,000 ரூபாய், ஒரு குடும்பத்திற்கு 80,000 ரூபாய் என ஓட்டுகளை விலை பேசி, அப்பாவி மக்களை ஏமாற்றி ஆர்.கே.நகரில் வெற்றி பெற்றார். அந்த நிலை தமிழகம் முழுவதிலும் நிச்சயம் தொடராது.

பொதுச்சின்னம் ஒதுக்கினாலும் அமமுக வேட்பாளர்கள் சுயேட்சை வேட்பாளர்களாகத் தான் கருதப்படுவர். அதனால், அமமுக என்பது ஒரு கட்சியல்ல. மக்கள் மத்தியில் எடுபடாது. அமமுக வேட்பாளர்கள் நோட்டாவுக்குக் கீழே வாக்குகள் பெறாமல் இருந்தால் சரி. பரிசுப்பெட்டி சின்னமும், அமமுக வேட்பாளர்களும் மக்களால் தவிர்க்கப்படக் கூடியவர்களாகத் தான் இருப்பார்கள்" என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT