தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள மக்களவைத் தலைவர் மீரா குமார் தனது வாக்கை செலுத்தவில்லை.
பிஹார் மாநிலம் சசாரம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அவர் போட்டியிடுகிறார். அவரது வாக்கு டெல்லி தொகுதியில் உள்ளது. டெல்லியின் 7 தொகுதிகளிலும் நேற்று தேர்தல் நடைபெற்றது. தனது தொகுதியில் மீரா குமார் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருப்பதால் அவர் வாக்களிக்கவில்லை.
சசாரம் தொகுதியில் இருந்து மீரா குமார் 3-வது முறையாக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் சேத்தி பாஸ்வான், ஐக்கிய ஜனதா தளம் சார்பில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான கே.பி. ராமைய்யா ஆகியோர் போட்டியிடுகின்றனர். இம்முறை போட்டி கடுமையாக இருப்பதால் மீரா குமார் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த மீரா குமார், முன்னாள் துணை பிரதமரும், தலித் தலைவருமான பாபு ஜெகஜீவன் ராமின் மகள். ஜெகஜீவன் ராம் இதே தொகுதியில் தொடர்ந்து எட்டு முறை வெற்றி பெற்றவர்.
பல்வேறு நாடுகளில் இந்தியத் தூதரக அதிகாரியாக மீரா குமார் பணியாற்றியுள்ளார். மத்திய அமைச்சரவையிலும் இடம் பெற்றிருந்தார். இந்தியாவின் முதல் பெண் மக்களவைத் தலைவரும் அவர்தான்.